ரஜினியின் பேட்ட படமும், அஜித்தின் விஸ்வாசம் படமும் பொங்கலுக்கு நான்கு நாட்களுக்கு முன்பே வெளியானது. இரண்டு படங்களுமே மாஸ் ஹீரோக்களின் படம் என்பதால் எது பாக்ஸ் ஆபிசில் முதலிடம் பிடிக்கும் என்ற ஆர்வம் ரசிகர்களுக்கிடையே இருந்தது. இரண்டு படங்களுக்குமே விமர்சன மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால், படத்தில் உள்ள சில ப்ளஸால் பேட்ட படத்தைவிட விஸ்வாசம் வசூலில் அதகளம் செய்து வருகிறது.

ரஜினி எப்போதுமே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பி மற்றும் சி சென்டர்களில் பேட்ட மூலம் கோட்டை விட்டதே, அஜித்தின் விஸ்வாசத்திற்கு போனது  தெரிகிறது. பேட்ட படத்தைவிட விஸ்வாசம் குடும்பக் கதையில் தேவையான அளவு சென்டிமெண்ட், காதல், ரொமான்ஸ், காமெடி, ஆக்ஷன் என  அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும்  இயக்குநர் கொடுத்திருப்பதே இந்த வெற்றிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

அஜித் இந்தப் படத்தில் தூக்குதுரை கதாபாத்திரத்தில் மதுரை ஸ்லாங்கில் பேசி அசத்தி இருக்கிறார். அவர் தனது மகளின் பாசத்திற்காக உருகும் தந்தையாக காட்சிக்கு காட்சிகள் தந்தைகளை கண்கலங்க வைத்து விடுகிறார்.  இதனால் குடும்பத்துடன் இப்படத்தைப் பார்க்க மக்கள் அதிகளவில் விரும்புகின்றனர்.

அதுமட்டுமல்ல, படத்தின் வெற்றிக்கு அதன் நாயகி நயன்தாராவும் முக்கியக் காரணம். சோலோ நாயகியாக தன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள ரோலில் நடித்து வரும் நயன், அஜித்திற்காக இப்படத்தில் மீண்டும் காதல் நாயகியாகி நடித்தாலும், அவரது கதாபாத்திரத்திற்கு இப்படத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழில் லேடி சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வரும் நயனுக்கு என தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. விஸ்வாசம் படத்திற்கு அஜித் ரசிகர்களோடு, நயனின் ரசிகர்களும் சேரும்போது படத்தின் வசூல் அதிகரிப்பதில் ஆச்சர்யமில்லை.

அடுத்ததாக சொல்லவேண்டுமென்றால், வெற்றியின் ஒளிப்பதிவு, ஈமானின் கலக்கலான பின்னணி இசை (BGM) என மிரட்டியது, எடிட்டிங் ரூபனும் கட்சிதமாக வேலை பார்த்துள்ளார். ஒட்டுமொத்தமாக சிவா தியேட்டருக்கு வரும் ஆடியன்ஸை அழவைக்காமல் விடக்கூடாது என்ற நோக்கத்தில் வேலை பார்த்துள்ளது தெரிகிறது.

அடுத்ததாக நம்ம தலைவர் நடித்த பேட்ட படத்தை பார்க்கலாம், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, நவாசுத்தீன் சித்திக்கி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த பேட்ட படம் கடந்த 10ம் தேதி வெளியானது. படம் ரிலீஸாவதற்கு முன்பே ஓவராக பில்ட்அப் கொடுத்திருந்தார்கள். ஆடியோ லான்ச், டீசர், டிரெய்லர் என மிரட்டினார்கள். 

ரிலீஸுக்கு முன்பு கொடுத்த ஓவர் பில்ட்அப்பால் எதிர்பார்ப்பு எகிறிவிட்டது. ஆனால் படத்தை பார்த்தபோது அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாமல் ஏமாற்றமே மிஞ்சியது. ஆமாம் பேட்ட படத்தில் ஒரு கூட்டமே நுழையும் அளவிற்கு பெரிய பெரிய ஓட்டைகள் நிறைய உள்ளன.  

ரஜினியை ஒரு மாஸ் சூப்பர் ஸ்டாராக மட்டும் அல்ல மாறாக கடவுள் அளவுக்கு காண்பித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். அவர் ரசிகனாக அல்ல  ஒரு வெறியனாக  ரஜினியை கொண்டாடுவது தெளிவாக புரிகிறது. ஆனால் எதற்கெடுத்தாலும் அவரால் மட்டுமே முடியும் என்று திரும்பத் திரும்ப பில்டப் கொடுப்பது குறைத்திருந்திருக்கலாம்.

அதுமட்டுமல்ல படம் ரொம்ம்ப்ப்ப அதிக நேரம் ஓடுகிறது. இடைவேளை எப்பொழுது வரும் என "ச்சு ச்சூ" முட்டிகிட்டு உட்காரும் அளவிற்கு காத்திருக்க வைத்து விடுகிறார். அதன் பிறகு இரண்டாம் பாதி முடிவதற்குள் தியேட்டர்களில் விடிந்து விடுகிறது,  நாம ரசித்த பழைய ரஜினியை பார்க்க என்ன ஒரு சந்தோஷம், அப்படி ஒரு ஆனந்தம். ஆனால்  இந்த அளவுக்கு காட்டினாள் எப்படி?  ரஜினியை கொண்டாடுவதில் குறியாக இருந்த கார்த்திக் எதார்த்தத்தை தொலைத்துவிட்டார்.

நடிப்பில் பழம் தின்னு கொட்டை போட்ட நடிகைகளான சிம்ரன், த்ரிஷா ஆகியோர் பெயருக்கு வந்துவிட்டு போகிறார்கள்.  இரண்டு நல்ல நடிகைகளை வேஸ்ட் செய்துவிட்டார். மக்கள் செல்வன் என பெயரெடுத்த ஒரு மகா நடிகன் விஜய் சேதுபதியை பயன் படுத்தியிருக்கலாம். வடக்கு பக்கம் போய் கூட்டிக்கிட்டு வந்த  நவாசுத்தீன் சித்திக்கியை என்ன செஞ்சிருக்கணும்? நல்லா வச்சு செஞ்சிட்டிங்க பாஸ்...

ரஜினி நடக்கும்போதும், கொனட்டும்போதும் ஸ்டைலாக உள்ளார் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் டான்ஸ் ஆடும்போதும், சண்டை போடும்போதும் அந்த ஸ்டைல் மிஸ் ஆகிறது, குறிப்பிட்ட படங்களில் குறிப்பிட்ட காட்சிகள் மனதைக் கவர்ந்தது என்பதற்காக அந்தக் காட்சிகளை எல்லாம் தொகுத்து திரைக்கதையில் அடுக்கினால் ‘மாஸ்’ உருவாகிவிடும் என்று நினைத்துச் செய்துள்ளனர். உதாரணமாகக் கேட்டைத் திறந்து ரஜினி உள்ளே நுழையும் காட்சி பிரபலம் என்பதற்காகப் படம் முழுக்க வெவ்வேறு இடங்களில் சுமார் பத்து கேட்டுகளை ரஜினி திறக்கிறார்.

கடைசியா சொல்லணும்ன்னா, ட்ரெய்லரில் சொன்ன சிறப்பான தரமான சம்பவம் எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து இறுதியில் அந்த சம்பவத்தை பார்க்கும்போது அட இவ்வளவு தானா என்று சலித்துக் கொள்ள வைத்துவிட்டது. ரஜினியின் நடிப்பை யாராலும் குறைசொல்ல முடியாது. அவர் சிறப்பான நடிகர். அவர் சூப்பர் ஸ்டார் தான் முள்ளும் மலரும், கபாலி, காலா மாதிரி நடிப்புக்கு தீனி போடும் படமாக மட்டுமே இருந்தால் சூப்பர்ஸ்டாராகவே இருப்பார். படையப்பா, பாட்ஷா மாதிரி மாஸா எடுக்க நினைத்தால் எப்படி?