சில வருடங்களாக காணாமல் போயிருந்த அயிட்டம் சாங் ஃபார்முலா புஷ்பா படத்துக்கு பிறகு மீண்டும் டிரெண்டிங் ஆகியுள்ளது

  • தென்னிந்திய மொழிகளில் ஹிட்டடித்த படங்களை ரீமேக் செய்வது மட்டுமல்ல, சில படங்களை டப் அடித்தும் இந்தியில் அப்லோடுகிறார்கள். அந்த வகையில் தளபதி விஜய்யின் பல படங்கள் டப் அடிக்கப்பட்டுள்ளன. அப்படி டப்பான ‘ஜில்லா’ படம் இருநூறு மில்லியன் பார்வையாளர்களை கடந்து செமத்தியாக கல்லா கட்டியுள்ளது.

(ஒரு பார்வைக்கு ஒரு ரூபா கிடைச்சாலும், இருநூறு மில்லியன். சொக்கா என்னா அதிர்ஷ்டம் பாருய்யா)

  • மீண்டும் ஒரு தளபதி! செய்தி. அதாவது, புஷ்பா படத்தின் சென்சேஷனல் ஹிட்டுக்கு அப்படத்தில் இடம்பெற்ற ‘மாமா’ பாடலும் காரணம். உச்ச நடிகை சமந்தா ஆடிய செம்ம கில்பா பாட்டான அதற்காகவே பெரும் கூட்டம் அப்படத்தை பார்த்தது. கடந்த சில வருடங்களாக காணாமல் போயிருந்த அயிட்டம் சாங் மீண்டும் டிரெண்டிங் ஆகியுள்ளது இதன் மூலம். அதனால்தான் சிரஞ்சீவி – ராம்சரண் இணைந்துள்ள ‘ஆச்சார்யா’விலும் அப்படியொரு பாட்டை, ரெஜினாவை வைத்து முடித்துள்ளனர்.

இந்நிலையில், தளபதி விஜய்யின் தெறி ஆக்‌ஷனில் தயாராகி இருக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில், அதிலும் ஒரு அயிட்டம் சாங்கை சேர்க்கிறார்களாம். செம்ம பீக் ஹீரோயின் ஒருவரை வைத்து இப்பாடல் உருவாக்கப்படும் போல் தெரியுது.

(குஷி! கட்டிப்பிடி கட்டிப்பிடிடா ரேஞ்சுக்கு ஒரு குத்து வையுங்க நெல்சன். தளபதி பூந்து வெளையாடி பல நாளாச்சு)

  • ஒரு காலத்தில் பாலிவுட் பவுடர் பார்ட்டிகள், தங்களின் படத்தை கோலிவுட் ரசிகர்கள் பார்ப்பதைக் கூட தீட்டு போல நினைத்து ஒதுக்கினார்கள். ஆனால் கடந்த சில வருடங்களாக கோலிவுட் ரசிகர்கள் சலிக்கச் சலிக்க ரசித்து துப்பிய படங்களை போட்டிபோட்டு ஹிந்தியில் ரீமேக் செய்ய துடிக்கிறார்கள் அங்கிருக்கும் ஹீரோக்கள். அந்த வகையில், சூர்யாவின் சூப்பர் ஹிட் சூரரைப் போற்றுவை இந்தியில் ரீமேக் செய்கிறார்கள். ஹீரோவாக அநேகமாக….அதான், அவரேதான். அக்‌ஷய்குமார் நடிக்கலாம் என தெரிகிறது. இதில் ஒரு பியூட்டி என்னவென்றால் சூர்யாவும் இதில் ஒரு தயாரிப்பாளர்.

(கையோட ஜெய்பீமையும் ரீமேக்கிடுங்க)

  • பிரபாஸ் பாகுபலி படத்திற்காக தன் உடலை வருத்திச் செதுக்கியது அபாரமான அர்ப்பணிப்பு. பின் விளைவுகளை எதிர்கொண்டே மிக மிக அதிகமாக புரோட்டீன் உணவுகளை எடுத்து, ‘பாகுபலி’ எனும் கேரக்டருக்கு நியாயம் செய்தார். அப்பட ஷூட்டிங் முடிந்து சில வருடங்களாகியும் கூட பிரபாஸின் உணவு முறை இப்பவும் சற்று அப்நார்மலாகதான் இருக்கிறது! என்று ஒரு தகவல் கசிந்துள்ளது.

(பாகுமதியோட சாப்பாடு எப்படியாம்?)