Durai: தேசிய விருது இயக்குனர் துரை யார் தெரியுமா? இந்த சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் இவரா.. அரிய தகவல்கள்!
தமிழில் காலத்தால் அழியாத பல படங்களை, இயக்கி பிரபலமான இயக்குனர் துரை யார்? அவர் இயக்கிய படங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 1940 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி பிறந்தவர் இயக்குனர் துரை. சிறு வயதில் இருந்தே திரைப்படங்கள் மீது உள்ள ஆர்வத்தால் திரைப்படங்கள் இயக்க வேண்டும் என முடிவு செய்து, சில இயக்குனர்களிடம், துணை இயக்குனராக பணியாற்றி பின்னர் இயக்குனராக மாறினார். இவர் இயக்குனர் என்பதை தாண்டி, திரைக்கதை எழுத்தாளர், பட தொகுப்பாளராகவும் அறியப்படுகிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம், மற்றும் ஹிந்தி திரையுலகிலும் பணியாற்றியுள்ள இயக்குனர் துரை, இதுவரை 46 படங்களை இயக்கி உள்ளார். மேலும் சிறந்த இயக்குனருக்கான தமிழக அரசு விருது, தேசிய விருது, பிலிம் ஃபேர் விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.
தமிழில் பொதுவாக ஆண்களை மட்டுமே கதையின் நாயகனாக வைத்து படம் எடுத்த காலத்தில், பெண்களை மையமாக வைத்து இவர் இயக்கியது பலரையும் ஆச்சர்யப்பட வைத்தது.
இயக்குனர் துரை, 1974-ஆம் ஆண்டு சுமித்ரா, ஆர்.முத்து ராமன் நடித்த 'அவளும் பெண்தானே' என்கிற படத்தை இயக்கி அதில் பாலியல் தொழிலாளி குறித்து பேசி இருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து, 1975-ஆம் ஆண்டு ஒரு குடும்பத்தின் கதை என்கிற படத்தை இயக்கி தன்னுடைய அடுத்த வெற்றியை தமிழ் சினிமாவில் பதிவு செய்தார்.
ஆசை 60 நாள் (1976), ரகுபதி ராகவன் ராஜாராம் (1977), பாவத்தின் சம்பளம் (1978), ஒரு வீடு ஒரு உலகம் (1978), சதுரங்கம் (1978), ஆயிரம் ஜென்மங்கள் (1978), பசி (1979), கடமை நெஞ்சம் (1979) ஒளி பிறந்தது (1979), நீயா (1979), பொற்காலம் (1980), மரியா மை டார்லிங் (1980), அவள் ஒரு காவியம் (1981), மயில் (1981), தனி மரம் (1981), கிளிஞ்சல்கள் (1981), துணை (1982), வெளிச்சம் விதருன்னா பென்குட்டி (1982), டூ குலாப் (1983), பெட் பியார் அவுர் பாப் (1984), வேலி (1985), ஒரு மனிதன் ஒரு மனைவி (1986), வீரபாண்டியன்(1987) , பாலைவனத்தில் பட்டாம்பூச்சி (1988) புதிய அத்தியாயம் (1990) என பல படங்களை இயக்கியுள்ளார்.
இவர் இயக்கத்தில் வெளியான, அவளும் பெண் தானா, நீயா , பசி, கிளிஞ்சல்கள், புதிய அத்தியாயம், ஆசை 60 நாள் போன்ற படங்கள் தற்போது வரை அதிகம் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இவரிடம் துணை இயக்குனராக பணியாற்றிய பலர் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களாக உள்ளனர். மேலும் 2011-இல் 58வது தேசிய திரைப்பட விருதுகளில் (இந்தியா) சார்பில் நடுவர் உறுப்பினராக பணியாற்றினார். 2011 வரை, இவர் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.