தமிழகத்தில் நெகட்டிவிட்டி அதாவது எதிர்மறை விஷயங்கள் அதிகம் பரப்பப்படுவதாக ரஜினி நீண்ட நாட்களாக குற்றஞ்சாட்டி வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

தர்பார் படவிழாவில் பேசிய போது இந்த நெகட்டிவிட்டி சமாச்சாரத்திற்கு ரஜினி அதிக முக்கியத்துவம் கொடுத்து பேசினார். தமிழகத்தில் அதிகம் நெகட்டிவிட்டி பரப்பப்படுவதாகவும் சமூக வலைதளங்கள் மட்டும் அல்லாமல் பிரதான ஊடகங்களிலும் கூட நெகடிவிட்டி பரப்பப்படுவதாகவும் ரஜினி வெளிப்படையாக பேசினார். அதாவது குறிப்பிட்ட சில தொலைக்காட்சிகள் மற்றும் புலனாய்வு இதழ்கள் தொடர்ச்சியாக அரசுக்கு எதிரான செய்திகள், திட்டங்களுக்கு எதிரான கருத்துகளை பரப்புவதையே ரஜினி இப்படி மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தன்னுடைய பேச்சுகளுக்கு கூட வேறு அர்த்தங்கள் கர்ப்பிப்பது, சர்ச்சையாக்குவது என்று சில ஊடகங்களின் போக்கு ரஜினிக்கு டென்சனை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த ஒரு மாத காலமாகவே தனக்கு நெருக்கமான மற்றும் ஊடகத்துறையில் முன்னேறி வரும் சில இளைஞர்களை ரஜினி தனது வீட்டிற்கே அழைத்து பேசி வருகிறார். அப்போது, ஊடகங்களில் செய்திகள் தீர்மானிக்கப்படுவது குறித்து ரஜினி வெளிப்படையாக கேட்டுள்ளார்.

அப்போது ஊடக பிரபலங்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ரஜினி ஒவ்வொரு ஊடகத்திலும் முடிவெடுக்கும் நிலையில் இருக்க கூடியவர்கள், அவர்களின் பின்னணி குறித்து விசாரிக்குமாறு ரஜினி தனக்கு நெருக்கமான ரசிகர் மன்ற நிர்வாகியிடம் கேட்டுள்ளார். இதன் அடிப்படையில் அண்மையில் ஊடக நிர்வாகிகள் தொடர்பாக ரஜினியிடம் ஒரு ரிப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த ரிப்போர்ட்டில் பெரும்பாலான ஊடகங்களின் தலைமை நிர்வாகிகள் திமுக சார்பு, இடதுசாரி சிந்தனை கொண்டவர்களாக இருப்பதாகவும் இந்துத்துவ கோட்பாடு உடையவர்கள், பாஜக, ஆர்.எஸ்.எஸ் சார்பிலானவர்கள் பிரதான ஊடகங்களில் ஓரம்கட்டப்படும் விஷயம் கொடுக்கப்பட்டுள்ளது. தவிர மக்களை எப்போதும் பதற்றத்திலேயே வைத்திருக்க வேண்டும், விவசாயிகள் ஆதரவு என்கிற போர்வையில் அரசின் திட்டங்களை எதிர்ப்பது போன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறித்தும் ரஜினிக்கு விளக்கமாக அந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்தே ஊடகங்கள் நெகட்டிவிட்டியை பரப்புகிறது என்று ரஜினி வெளிப்படையாக பேசியுள்ளார் ரஜினி.