தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையான இயக்குநர்தான் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால் விஜய்யை வைத்து அவர் இயக்கிய ‘கத்தி’ படம் ‘கதை திருட்டு’ பஞ்சாயத்தில் சிக்கி, அவர் பெயர் சேதாரமானது எல்லோரும் அறிந்ததே. அந்தப் படம் மெகா ஹிட் என்றாலும் கூட, அந்த ‘கதை திருட்டு’ விவகாரம் கோர்ட் சென்று அசிங்கப்பட்ட நிலையில் அதிகமாய் டென்ஷனானார் விஜய். 

இந்நிலையில், ஸ்பைடர் பட தோல்விக்குப் பின் விஜய்யிடம் கதை சொல்ல டைம் கேட்டார் ஏ.ஆர்.எம். அப்போது விஜய் அந்த பழைய விவகாரத்தை நாசூக்காக சுட்டிக் காட்டி, ‘க்ளியரா இருப்போம் ப்ரோ!’ என்றார். என்ன இருந்தாலும் முக்கிய இயக்குநரில்லையா! இதற்கு முருகதாஸோ ‘சார் அதெல்லாம் ஒரு பிரச்னையுமில்லை. இது என்னோட கதைதான். நோ இஸ்யூ’ என்றார். 

விஜய்யும் உற்சாகமாய் கமிட் ஆனார், சர்கா உருவாக துவங்கியது. சன் பிக்சர்ஸும் மேடையில் விஜய் சொன்னது போல் ‘கலையை வளர்க்க நிதியை அள்ளியள்ளி கொடுத்தது.’ அரசியல் அனல் பறக்க பறக்க ஆடியோ வெளியீடும் முடிந்து இதோ தீபாவளிக்கு படம் ரிலீஸுக்கு தயார். 
இந்நிலையில் சர்கார் படத்தின் கதை தன்னுடையது, சங்கத்தில் அதை பக்காவாக பதிந்து வைத்துள்ளேன். ஆனால் இயக்குநர் முருகதாஸ் அதை திருடிவிட்டார்! என்று வருண் என்பவர் சாலிடான ஆதாரங்களுடன் எழுத்தாளர் சங்கத்தில் சில வாரங்களுக்கு முன் புகார் கொடுத்திருந்தார். 

அவரது கையில் உள்ள ஆதாரங்கள் துல்லியமாக உள்ளதால், சங்க நிர்வாகியான கே.பாக்யராஜ், முருகதாஸிடம் ‘டைட்டில்ல அவர் பெயரை போடுங்க, இல்லேன்னா பணமாவது செட்டில் பண்ணிடுங்க. ஆதாரங்கள் ஸ்டிராங்கா இருக்குது.’ என்றாராம். அதற்கு முருகதாஸ் ‘வாய்ப்பே இல்ல. இது என் கதை’ என்று மறுத்துவிட்டாராம். வருணின் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்கிறார்கள். ரஷ் போட்டு பார்த்து ‘ஆஹா!’ என்றிருக்கும் நிலையில் வருண் விவகாரம் இடிக்கிறது ப்ரொடக்‌ஷன் தரப்புக்கு. சரி, ரிலீஸ் வரைக்கும் இழுத்துவிடலாம். ரிலீஸாகி ஓட துவங்கிவிட்டால் பெரிய பிரச்னை இருக்காது, ஏதாவது செய்து சமாளிக்கலாம்! என்று பிக்சர்ஸ் தரப்புக்கு சிலர் ஐடியா பிஸ்கெட்டுகளை அள்ளி கொடுத்திருக்கின்றனர். 

உண்மையில் என்ன நடக்கப்போகுதோ தெரியவில்லை. ஆனால் இதற்குள் கோடம்பாக்கம் தாண்டி அக்கம் பக்க மாநில சினிமா துறைக்குள்ளும் இந்த தகவல் தாறுமாறாக பரவிவிட்டதாம். பலர் தலையிலடிக்கிறார்களாம். குறிப்பாக கோடம்பாக்க இளம் இயக்குநர்கள் முருகதாஸின் முரட்டுத்தனத்தால் கொதித்துக் கிடக்கிறார்களாம். 

விஷயத்தை கவனித்துக் கொண்டிருக்கும் விஜய் செம்ம டென்ஷனில் இருக்கிறார் என்று தகவல். கடந்த சில நாட்களாக சர்கார் ரஷ் குறித்து பேச முருகதாஸ் போன் மேல் போன் போட்டும் விஜய் எடுக்கவில்லையாம், ஒரு நபரை தூது அனுப்பியபோது ‘அந்த விஷயத்தை க்ளியர் பண்ணிட்டு என்கிட்ட பேச சொல்லுங்க.’ என்று முருகதாஸுக்கு டெட்லைன் கொடுத்து அனுப்பியுள்ளதாக தகவல். புகார் கொடுத்திருக்கும் வருணோன் பரிதாபமாக நிற்கிறார்! என்கிறார்கள். 

ஆனால் இன்னொரு தரப்போ ‘இதெல்லாமே படத்தை ப்ரமோட் செய்ய வைக்கிற யுக்தி.’ என்கிறது. பட ப்ரமோஷனுக்கு பேட்டி, டூர்ன்னு ஆயிரம் வழியிருக்க, ஒரு ஹிட் இயக்குநர் தன் மானத்தை பலிகிடாவாக்கிட்டா விளம்பரம் செய்வார்!?