மிக கட்டாய வெற்றிப் படங்கள் இரண்டு மூன்றை கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருகிறார் சிவகார்த்திகேயன். ரொமான்ஸ், சீரியஸ், காமெடி என எல்லா ஜானர்களிலும் அவர் நடித்தப் படங்கள் அட்டர் ஃபிளாப் ஆகிவிட்ட நிலையில், மீண்டும் ஃபேமிலி என் டர்டெயினருக்குள் நுழைந்திருக்கிறார் சிவா. 

அதுக்கு பாண்டிராஜை விட்டால் வேறு யாரால் கை கொடுக்க முடியும்? சில காலங்களுக்கு முன்பு வரை அழுத்தமான கதையோட்டங்களுடன் வலுவான சில கதாபாத்திரங்களை வைத்து நல்ல படைப்புகளை தந்து கொண்டிருந்தார் பாண்டிராஜ். ஆனால் சமீப காலமாக விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார் ரேஞ்சுக்கு பெரும் நட்சத்திரப் பட்டாளத்தை வைத்துக்  கொண்டு கலர்ஃபுல் கண்காட்சி நடத்துவதே பாண்டிராஜின் வேலையாகிவிட்டது.

  

அந்த வகையில் அவரது கடைசிப்படமான ‘கடைக்குட்டி சிங்கம்’ நல்ல கதையம்சமும் இருந்ததால் ஈர்த்தது. ஆனால் கட்டாய வெற்றிக்காக தன்னிடம் சரணடைந்திருக்கும் சிவகார்த்திகேயனை அவர் வெச்சு செஞ்சுட்டார் என்றே தோன்றுகிறது. ஆம், எந்த ஒரு புதுமையும், ஃப்ரெஸ்னஸும் இல்லாமல் வெகு சாதாரணமாக கடந்து போகிறது ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ படத்தின் டிரெய்லர். 

அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து வந்திருக்கும் பனிரெண்டாயிரத்து நானூற்று முப்பத்து ஓரு படங்களில் இருக்கும் அதே காட்சிகள்தான் இதிலும். தாவணி தங்கையோடு ஆட்டம், அவளின் கல்யாண காட்சியில் கலக்கம் பிளஸ் அங்கே ஹீரோயின் சந்திப்பு, வாயும் வயிறுமாக இருக்கும் தங்கைக்கு பிரச்னை என்று அரைத்த மாவை மட்டுமல்ல, புளிச்ச மாவை அரைத்து வைத்திருக்கிறார். 

சரி சிவகார்த்தி, சூரியின் காமெடி போர்ஷனாவது ஜொலிக்குமா? என்று பார்த்தால் டிரெய்லரின் காமெடி பீஸ்கள் சின்ன கிச்சு கிச்சு கூட காண்பிப்பதாக இல்லை. வெகு சாதாரணமான இந்த கிராமத்து கதைக்கு நிரவ்ஷாவின் ஒளிப்பதிவு பெரிய நியாயம் செய்துள்ளது. இமானின் ஆல்பம் ஏற்கனவே சூரியன் எஃப்.எம். புண்ணியத்தில் ஹிட்டாகிவிட்டது. பசங்க, ஹைகூ, கடைக்குட்டி சிங்கம் படத்தில் அந்தந்த ஜானர்களில் ஈர்த்த பாண்டிராஜின் வசனங்கள் இந்தப் படத்தில் அதையும் செய்யவில்லை. ‘சொந்த ஊர்ல தோற்க துணிஞ்சுட்டவனை யாராலேயும் வெல்ல முடியாது.’ என்று ஒன்றை மட்டுமே அடையாளப்படுத்திட முடிகிறது. 

சற்றே உடம்பு உப்பிவிட்டவராய் தெரியும் சிவகார்த்திகேயனிடம் தோற்ற ஈர்ப்பு குறைந்துள்ளது என்பதே உண்மை. கலாநிதி மாறன் சூரியன் எஃப்.எம். மற்றும் சன் டி.வி.குழுமத்தில் இந்தப் பட விளம்பரத்தை மறுக்கா மறுக்கா போட்டு, வியாபார ரீதியில் ஹிட்டடிக்க பார்க்கலாம். அது கைகொடுக்கவும் செய்யலாம் ஒரு வேளை. ஆனால் மானசீகமாக மக்களின் மனதை இந்தப்படத்தின் மூலம் சிவகார்த்தி தொடுவாரா என்பது டவுட்டே!