விஷாலின் சினிமா ஜாதகம் விநோதமாக இருக்கிறது! நடிகனாக சினிமா துறைக்குள் வந்தவர் துவக்கத்தில் தாறுமாறாக ஹிட் அடித்தாலும் கூட அதன் பிறகு அவரது சினிமா கிராஃப் எகிடுதகிடாக இறங்கியேறி, ஏறியிறங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் என்று திரைத்துறை சார்ந்த மற்ற விஷயங்களில் கில்லியாக வென்றிருக்கிறார். 

சமீப காலமாக அவரது படங்கள் வரிசையாக பாக்ஸ் ஆபீஸின் பாட்டத்தில் போய் பதுங்கிக் கொள்ள, மிஷ்கின் மீது ஏக நம்பிக்கை வைத்து ‘துப்பறிவாளன்’ ப்ராஜெக்டின் தயாரிப்பாளராக கமிட் ஆகி, ஹீரோவாகவும் கையெழுத்துப் போட்டிருக்கிறார் விஷால்.

இயக்குநர் ராம்_மை ஹீரோவாக வைத்து தனது சிஷ்யன் ஆதித்யாவின் இயக்கத்தில் தான் வில்லன் வேஷம் கட்டியிருந்த ‘சவரக்கத்தி’யின் ரிலீஸை கூட ஒத்தி வைத்துவிட்டு விஷாலுக்காக இந்த படத்தில் முழுக்க முழுக்க கமிட்மெண்ட் காட்டியிருக்கிறார் மிஷ்கின். இந்த படத்துக்கான கதையை நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் அமர்ந்துதான் வடிவமைத்தார் மிஷ்க்! 

படத்தின் ஆக்‌ஷன் பிளாக்குகள் ஒவ்வொன்றும் பேசப்படும் என்கிறார்கள். முட்டுக்காட்டில் சமீபத்தில் நடந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பின் போது விஷாலுக்கு நிஜ காயமே விழுமளவுக்கு சண்டைக்காட்சிகள் சுடச்சுட ஷூட் ஆகின. 
இந்த படத்தில் பாடல்கள் இல்லைதான். ஆனால் மிஷ்கின் ஒரு பாடல் பாடியிருக்கிறார்! அது எந்த மாதிரியாக படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. 

நாயகனென்றால் ஒரு நாயகி இருக்க வேண்டும், இரண்டு பேரும் இருந்தால் ஒரு வில்லன் இருக்க வேண்டும்! என்கிற தத்துப்பித்து தமிழ் சினிமாத்தனங்களை குப்பையில் தூக்கிப் போட்ட இயக்குநர் மிஷ்கின். இதனால் துப்பறிவாளனில் ஆண்ட்ரியாவுக்கான ஸ்பேஸ் என்ன லெவலில் இருக்கப்போகிறது என்பது சஸ்பென்ஸ். ஆண்ட்ஸ் எப்பவுமே “நான் வேற மாதிரி” என்று சொல்லும் கேரக்டர்.

அதிலும், ’தரமணி’யின் வெற்றி அவரை வேற தரத்துக்கு கொண்டு போயிருக்கிறது. 
பால் டப்பா போல் வலம் வந்த பிரசன்னாவை, சைலன்ட் கில்லர் வில்லனாக ‘அஞ்சாதே’வில் பயன்படுத்தியிருந்தார் மிஷ்கின். அந்த பிரசன்னா இப்போது துப்பறிவாளனில் மீண்டும் மிஷ்கினோடு இணைந்திருக்கிறார். 

இது போக சிம்ரன், பாக்யராஜ், வினய் ராய், அனு இம்மானுவேல் என்று ஒரு பளிச் கூட்டமும் இந்த ஃபிலிக்கில் இருக்கிறது. 
ஷேர்லக்ஹோம் டைப் கதை என்று சொல்லப்படும் ‘துப்பறிவாளன்’ மூலம் விஷாலின் தலை தப்புமா? என்று பார்ப்போம். 
வரும் வியாழக்கிழமை அதாவது செப்டம்பர் 14_ம் தேதியன்று திரைகளை தொடுகிறான் துப்பறிவாளன்.