நடிகை ஸ்ரீதேவி கொல்லப்பட்டதாக கேரள டிஜிபி ரிஷிராஜ் சிங் புதிய சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார். இந்நிலையில் இதுபோன்ற முட்டாள்தனமான கதைகளுக்கு பதில் சொல்ல மாட்டேன் என போனி கபூர் பதிலடி கொடுத்துள்ளார். 

கடந்த ஆண்டு துபாயில் உறவினர் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக கணவர் போனி கபூர் மற்றும் குடும்பத்தினருடன் நடிகை ஸ்ரீதேவி சென்று இருந்தார். அங்கு நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தபோது மயங்கிய நிலையில் குளியல் அறை தொட்டியில் மூழ்கி இறந்து கிடந்தார்.

ஸ்ரீதேவி மறைந்து ஓராண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தன்னுடைய நண்பரும் மறைந்த தடயவியல் நிபுணருமான டாக்டர் உமாதாதன் தெரிவித்ததாக கேரள டிஜிபி ரிஷிராஜ் சிங் புதிய சர்ச்சையை கிளப்பினார்.

ஒருவர் எவ்வளவு போதையில் இருந்தாலும் ஒரு அடி தண்ணீரில் மூழ்க வாய்ப்பில்லை. இரு கால்களையும் பிடித்துக்கொண்டு, தலையை அழுத்தி தண்ணீரில் மூழ்கடித்தால் மட்டுமே உயிரிழக்க முடியும் என்று உமாதாதன் கூறியதாக ரிஷிராஜ் சிங் ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார்.

இந்நிலையில் ரிஷிராஜ் சிங்கின் கருத்துக்கு ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுபோன்ற முட்டாள்தனமான கதைகளுக்கு எதிர்வினையாற்ற விரும்பவில்லை. இதுபோன்ற கதைகள் தொடர்ந்து வருவதால் பதில் அளிக்கத் தேவையில்லை. அடிப்படையில் ஒருவரின் கற்பனை இது’’ எனத் தெரிவித்துள்ளார்.