​சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் தான் இசைஞானி இளையராஜாவின் ரெக்கார்டிங் பணிகளை  பல ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தார். அவருக்கென தனி தியேட்டா் ஒதுக்கி கொடுத்திருந்தது பிரசாத் ஸ்டுடியோ நிா்வாகம். இளையராஜா தனது பெரும்பாலான படங்களுக்கு அங்குதான் இசையமைத்தாா். இளையராஜாவின் திறமையை மதித்து எல்.வி.பிரசாத் இந்த ஏற்பாடுகளை செய்து கொடுத்திருந்தார் என்பது அனைவரும் அறிந்தது தான். 

ஆனால் எல்.வி.பிரசாத்தின் வாரிசுகள் இளையராஜாவின் ஸ்டூடியோவை இடித்துவிட்டு, புது தியேட்டர் கட்ட முடிவு செய்ததால் கடந்த ஒரு வருடமாக பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து இளையராஜா காலி செய்து தர வேண்டும் என, அதன் நிர்வாகத்தினர் அவருக்கு நெருக்கடி கொடுத்து காலி செய்யவைத்தனர். பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்திற்கு எதிராக இயக்குனர் பாரதி ராஜா,  தலைமையில், பிரபலங்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

மேலும் இதுகுறித்து இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள தன்னுடைய பொருட்களை எடுக்க அனுமதி கோரி தொடர்ந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிமன்றம், அவரது இசை கருவிகள் மற்றும், ஸ்டூடியோவில் உள்ள பொருட்களை எடுக்க அனுமதிக்காதது ஏன் என்றும், இளையராஜாவை சிலமணி நேரம் தியானம் செய்ய கூட அனுமதிக்காதது ஏன்? என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது.

அப்பொழுது பிரசாத் ஸ்டுடியோ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் கூறியதாவது, இளையராஜா பயன்படுத்தி வந்த அரங்கில் தற்போது மென்பொருள் நிறுவனம் இயங்கி வருகிறது. அவரின் பொருட்கள் எல்லாம் வேறு ஒரு அறையில் பத்திரமாக இருக்கிறது. அதை அவர் விரும்பிய நேரத்தில் வந்து எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தியானம் செய்வது குறித்து உரிமையாளர்களிடம் கேட்க வேண்டும் என்றார்.

 

இதையும் படிங்க: இனி முல்லையாக நடிக்கப்போவது இவர் தான்... முதன் முறையாக ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான புகைப்படங்கள்...!

இதையடுத்து ஒத்திவைக்கப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது, இளையராஜாவை ஸ்டுடியோவுக்குள் அனுமதிக்க முடியாது என்றும், அவர் சார்பில் யாராவது வந்து பொருட்களை எடுத்துச் செல்லட்டும் என்றும் பிரசாத் ஸ்டுடியோ சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கறிஞர் ஒருவரை ஆணையராக நியமிப்பதாகவும், அவருடன் இளையராஜா, பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர்கள் செல்லலாம் என்றும் நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்தார். இது தொடர்பாக இரு தரப்பும் பேசி செவ்வாய்க்கிழமை விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.