அனைவரிடமும் அன்புகாட்டி அமைதி பூத்துச்செல்பவர் விஜய் சேதுபதி. ஆனால், சமீபகாலமாக அவர் அப்படி இல்லை. சில நாட்களாகவே அதிகம் உணர்ச்சிவசப்படுகிறார். 

சமீபத்தில் நடைபெற்ற சம்பவத்தைப் பார்த்தவர்களுக்குப் பேரதிர்ச்சி. ஒருவரைத் தாக்கிப் பேசத் தெரியாத விஜய் சேதுபதி ஏன் அப்படி நடந்துகொண்டார்? எல்லாவற்றுக்கும் காரணம் அந்த 96 படப்பிரச்சினைதான். விஜய் சேதுபதியைப் பொறுத்தவரை 96 திரைப்படத்தால் ஏற்பட்ட காயம் இன்னும் ஆரவில்லை. 

தன்னைப் பயன்படுத்தி, தனது வளர்ச்சியில் மற்றவர்கள் குளிர்காய்கிறார்களோ எனும் எண்ணம் அதிகமானதே, நானே சதுரங்கக் காயாக நின்றேன் என்று அவர் சொல்லக் காரணம். அதனால்தான் ஒரு கேள்வியால் அவரை கார்னர் செய்ய முயன்றபோது, அவரை அறிவாளியாகக் காட்டிக்கொண்டு தன்னை முட்டாளாக்கப் பார்க்கிறாரோ? என கொந்தளித்துவிட்டார். விஜய் சேதுபதி ஓடும் குதிரை என்பதால் அவர் மீது பந்தயம் கட்ட எல்லோரும் தயார்.ஆனால், அது பந்தயக் காசாக இல்லாமல், குதிரையைப் பராமரிக்க வாங்கும் கடனாக மாறுவதால், கிட்டத்தட்ட விஜய் சேதுபதி மீதே உரிமை கொண்டாடும் நிலைக்கு அவரை ஆளாக்கிவிடுகிறது.

‘விஜய் சேதுபதியின் கால்ஷீட் இருக்கிறது என்ற உத்தரவாதத்தில் வாங்கப்படும் கடனை, விஜய் சேதுபதி படத்தை நிறுத்தித்தான் வாங்க வேண்டியதிருக்கிறது. படம் ஹிட் அடிக்கும். வந்து தர்றோம் என்று ஃபைனான்சியருக்குக் கொடுக்கும் வாக்குறுதியை, ஹீரோவிடம் கொடுத்து எங்கள் பணத்தை திருப்பிவிட்டு படம் ஓடியதும் ஹீரோவிடம் கொடுக்கலாமே’ என ஆதங்கப்படுகிறார் ஃபைனான்சியர் ஒருவர். இரு தரப்பும் அவரவர் பக்கத்து நியாயத்தைப் பேசும்போது, இரண்டுமே சரியாகத் தோன்றுவதால்தான் ‘இது நம்ம இரண்டு பேர் பேசுவதால் மாறக்கூடியது அல்ல’ என்று விஜய் சேதுபதி எப்போதும் கூறுகிறார்.