’சிறு படத்தயாரிப்பாளர்களைக் காப்பாற்றப்போகிறேன் என்று சொல்லிப் பதவிக்கு வந்த விஷால் தமிழ்சினிமாவின் அத்தனை சிறு படத்தயாரிப்பாளர்களையும் நடுத்தெருவுக்குக் கொண்டுவராமல் ஓயமாட்டார். எனவே அவர் பதவியை விட்டு விலகி அழிந்துகொண்டிருக்கும் தமிழ்சினிமாவைக் காப்பாற்றவேண்டும்’ என நடிகர் உதயா மற்றும் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் கூட்டாக கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர்.

இதே காரணத்தைக் கூறி இவ்விருவரும் தங்கள் செயற்குழு உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளனர்.
 சிறு பட தயாரிப்பாளர்களை பாதுகாக்கவும், அவர்கள் வளர்ச்சிக்காகவும் சங்க தலைவர் விஷால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி இருவரும் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களோடு இன்னும் ஓரிரு தினங்களில் விஷாலின் அலட்சியப்போக்கைக் கண்டித்து சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் ராஜினாமா கடிதத்துடன் காத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

 உதயா தயாரித்து நடித்த ’உத்தரவு மகாராஜா’ திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. தீபாவளிக்கு வெளியான சர்கார் திரைப்படம் ஏற்கனவே ஏராளமான தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், கடந்த வாரம் காற்றின் மொழி, திமிரு புடிச்சவன், உத்தரவு மகாராஜா ஆகிய படங்கள் வெளியாகின. இதனால் உதயாவின் உத்தரவு மகாராஜா படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இதே போல தீபாவளிக்கு ரிலீசான ஆர்.கே.சுரேஷின் பில்லா பாண்டி படத்துக்கும் போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை.

இதே பிரச்சினையை பல காலமாகவே சிறுபடத்தயாரிப்பாளர்கள் அனுபவித்துவரும் நிலையில் எதற்கெடுத்தாலும் அரைவேக்காட்டுத்தனமான அறிக்கைகள் மட்டுமே வெளியிடும் விஷால் உடனே பதவி விலகவேண்டும் என்ற கோஷங்கள் வலுத்துவருகின்றன.