பொங்கலுக்கு வெளியான பேட்ட, விஸ்வாசம் பட வசூலை கூட்டி குறைத்து கூறி ரஜினி, அஜித் ரசிகர்கள் தாறுமாறு கிளப்பி வருகிறார்கள். இந்த நிலையில் பேட்ட படத்தின் உண்மையான வசூல் நிலவரத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

ஜனவரி 10-ம் தேதி அஜித்தின் விஸ்வாசம் வெளியான அதேநாளில் இந்தப் படமும் திரைக்கு வந்தது. அதனால் பேட்ட, விஸ்வாசம் ஆகிய இருபடங்களில் எந்தப் படம் வசூலில் சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அதேபோல் தமிழகத்தில் பேட்ட படத்தின் வசூல் சாதனையை அஜித்தின் விஸ்வாசம் முறியடித்துவிட்டதாகவும் பாக்ஸ் ஆஃபிஸ் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில் சன்பிக்சர்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் படத்தின் வசூல் நிலவரம் குறித்து பேசியிருக்கும் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம், “வரும் ஞாயிற்றுக்கிழமையோடு அதாவது பேட்ட படம் வெளியான 11 நாட்களில் தமிழகத்தில் ரூ.100 கோடி வசூலைத் தாண்டும். இது உண்மையான நிலவரம். இந்தப் படம் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளருக்கு லாபம் கொடுத்திருக்கிறது. அதனால் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளோம்’’ எனக் கூறியுள்ளார். அந்த வீடியோவில் பேட்ட பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் உடனிருந்தார். இந்த வீடியோவை சன் பிக்சர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


ஆனால் விஸ்வாசம் படம் ரிலீஸ் ஆகி வெறும் 8 நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ 125 கோடி வசூல் செய்து விட்டதாக படத்தை ரிலீஸ் செய்த கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.