28 ஆண்டுகளாக தியேட்டர் பக்கமே போகாத 84 வயது பெரியவர் ஒருவர் ‘விஸ்வாசம்’ படம் பார்க்கச்சென்றுள்ளார். படம் தந்தை-மகள் பாசம் பற்றியது என்று சொல்லப்பட்டதாலேயே தான் இவ்வளவு ஆண்டுகள் கழித்து தியேட்டருக்கு சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

புதுச்சேரியை சேர்ந்த 84 வயதுள்ள முதியவர் சீனிவாசன். பல வருடங்களாக தியேட்டர்க்குப் போய் சினிமா பார்க்கும் வழக்கத்தையே விட்டிருந்த அவர் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ‘விஸ்வாசம்’ படம் பார்க்க தியேட்டர் வந்துள்ளார். இதுகுறித்து அவரது பேரன் ராம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எனது குடும்ப உறுப்பினர் 18 பேருடன் ‘விஸ்வாசம்’ படம் பார்க்க வந்துள்ளேன்; என் தாத்தா, 1991ம் ஆண்டு வெளியான ‘தளபதி’ படத்தைதான் இறுதியாக தியேட்டரில் பார்த்தார்; தற்போது, 28 ஆண்டுகளுக்குப் பிறகு ‘விஸ்வாசம்’ பார்க்க தியேட்டருக்கு வந்துள்ளார்’ என்று பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து ராம் கூறுகையில், “அவருக்கு படம் மிகவும் பிடித்திருந்தது. குறிப்பாக, படத்தின் இறுதிக்காட்சிகள். அஜித்தின் பல படங்களை தொலைக்காட்சியில் பார்த்துள்ளார்; ஆனால், இது அவருக்கு புதுவிதமான அனுபவம். அஜித், இந்தப் படத்தில் நன்றாக நடித்துள்ளதாக கூறினார்; எம்ஜிஆர், ரஜினிக்குப் பிறகு கவர்ச்சிகரமான நடிகர் அஜித் என்றார். அத்துடன், குழந்தையாக வந்த அனிகாவும் நன்றாக நடித்ததாக கூறினார்” என்றார்.

சும்மாவே ஆடிக்கொண்டிருக்கும் அஜீத் ரசிகர்கள் இன்னும் சலங்கை கட்டி ஆட ‘விஸ்வாசம்’ படம் குறித்த இதுபோன்ற செய்திகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன.