’எங்களிடம் ஒரு மில்லியன் கேள்விகள் கேட்டாலும் நாங்கள் சொல்வது ஒரே பதில்தான். தமிழ்சினிமாவின் ஒரே மாபெரும் வெற்றிப்படம் என்றால் அது விஸ்வாசம்தான்’ என்று மீண்டும் ரஜினி ரசிகர்களை வம்பிக்கிழுத்து ஒரு புதிய டிசைனை வெளியிட்டுள்ளார் பிரபல விநியோக நிறுவனம் கேஜேஆர் ஸ்டுடியோஸ்.

’விஸ்வாசம்’ படம் ரஜினியின் ‘பேட்ட’ படத்துடன் வெளியானதால், இரண்டு படங்களுக்கும் பலத்த போட்டி நிலவி வருகிறது. சினிமா வட்டாரத்தில் இரண்டு படங்களின் வசூல் நிலவரங்கள் குறித்து பல பேச்சுகள் நிலவி வந்தபோது, ஒரே வாரத்தில் தமிழக அளவில் ’விஸ்வாசம்’ 125 கோடி வசூலித்தது என கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

இந்நிலையில், கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், “மொத்த கலெக்‌ஷன்ஸ் எவ்வளவு..? தமிழக அளவில் தியேட்டர் கலெக்‌ஷன்ஸ் எவ்வளவு..? என மில்லியன் கேள்விகள் நீங்கள் கேட்கலாம்; ஆனால், எங்களிடம் ஒரே ஒரு பதில்தான் உள்ளது. தமிழ் சினிமாவில் ‘விஸ்வாசம்’ மிகப் பெரிய ப்ளாக் பஸ்டர் வெற்றி; இது எங்கள் வெற்றி அல்ல, உங்கள் வெற்றி. இந்தப் படத்தின் வினியோகஸ்தர் என்ற முறையில் நம்பிக்கையுடனும் பெருமையுடனும் சொல்கிறேன், ‘விஸ்வாசம்’ நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய வெற்றி. தயாரிப்பாளர், வினியோகஸ்தர், தியேட்டர் அதிபர்கள் என அனைவருக்கும் லாபம் ஈட்டிக் கொடுத்த படம்” என்று கூறியுள்ளது.

மேலும் படம் 5 வது வாரத்தை எட்டியுள்ள நிலையிலும் இன்னும் 208 தியேட்டர்களில் ‘விஸ்வாசம்’ ஓடிக்கொண்டிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்து ரஜினி ரசிகர்களை வம்புக்கு இழுக்கிறது அந்த நிறுவனம்.