தனது காதல் மனைவி ரஜினியை விவாகரத்து செய்ததற்கான காரணத்தை முதல் முறையாக மனம் திறந்து வெளியிட்டிருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால். ஆனால் இன்றும் மனைவியை உயிருக்குயிராய் நேசிக்கிறேன் என்கிறார்.

நடிகரும் இயக்குநருமான நட்ராஜின் மகள் ரஜினியை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்த விஷ்ணு விஷால் அவரை 2011ல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். சந்தோஷமாக இருவரும் வாழ்ந்துவந்த நிலையில் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் முறைப்படி விவாகரத்து பெற்றனர்.

ஆனால் விவாகரத்துக்கான காரணம் குறித்து இருவருமே ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இந்நிலையில் தனது விவாகரத்துக்கான காரணம் படங்களில் நடிகைகளுடன் நெருங்கி நடித்ததை மனைவி விரும்பாததுதான் என்று தெரிவ்த்துள்ளார் விஷ்ணு விஷால். “ துவக்கத்தில் நான் மிகவும் கூச்ச சுபாவமுள்ளவனாக இருந்தேன். பிறகு திரையுலகில் வெற்றி அடைய அது சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்து நடிகைகளுடன் நெருக்கமாக நடிக்க ஆரம்பித்தேன்.

எனது அந்த திடீர் மாற்றத்தை எனது மனைவியால் ஜீரணிக்க முடியவில்லை. தான் காதலித்த நபர் நான் அல்ல என்று சண்டை போட ஆரம்பித்தார். சினிமாவை நான் புரிந்துகொண்ட அளவுக்கு அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை எனும்போது தொடர்ந்து மோதல் வெடிக்கவே பிரிந்துவிட்டோம். இப்போதும் நான் எனது மனைவியையும் பையனையும் உயிருக்குயிராக நேசிக்கிறேன். அவர்களும் அவ்வாறே நேசிக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும்’ என்கிறார் அவர்.