​“பீட்சா” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் காமெடி நடிகர் கருணாகரன். இதையடுத்து இவர் நடித்த சூது கவ்வும் படத்தில் இடம் பெற்ற  காசு.. பணம்... துட்டு....மணி...மணி... பாடல் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றது. அதன் பின்னர், “ஜிகர்தண்டா”, “லிங்கா”, “நேற்று இன்று நாளை”, “விவேகம்”, “இருமுகன்” என பல படங்களில் நடித்துள்ளார். 

லாக்டவுன் காரணமாக சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக மாறிய திரைப்பிரபலங்களில் இவரும் ஒருவர்.  தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் இவருக்கு காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது சிம்புவுடன் “மாநாடு” படத்தில் நடித்து வரும் நிலையில், கடந்த வாரம் கருணாகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது போன்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகின. 

இதுபற்றி விசாரித்த போது கருணாகரனுக்கு படப்பிடிப்பின் போது பலமுறை காலில் அடிபட்டுள்ளது. கடைசியாக மாநாடு பட ஷூட்டிங்கின் போது காலில் அடிபடவே, அவர் ஸ்கேன் செய்து பார்த்துள்ளார். அப்போது அவருக்கு மூட்டு கிழிந்துள்ளது தெரியவந்துள்ளது. தற்போது அதற்கான அறுவை சிகிச்சை முடிந்துள்ளதாகவும், அவரை குறைந்தது 3 வாரத்திற்காகவது ஓய்வு எடுக்க வேண்டுமென மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் கருணாகரனை நேரில் சந்தித்துள்ளார். அவர் படுத்துக்கொண்டு பாட்டு கேட்டு ரசிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள விஷ்ணு விஷால், “என் நண்பர் கருணாகரன் ACL அறுவை சிகிச்சை முடித்து அதில் இருந்து குணமாகி வருகிறார். அவர் இதை என்ஜாய் செய்கிறார் போல தெரிகிறது. அவருக்கு எப்படி காயம் ஏற்பட்டது? அவர் உண்மையை மறைகிறார் என நினைக்கிறேன். இந்த லாக் டவுனில் காயம் ஏற்பட அவரது மனைவி காரணமாக இருக்கலாம். ஆனால் அவர் ஷூட்டிங்கில் ஏற்பட்ட காயம் என சொல்கிறார்” என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு கலவரமூட்டியுள்ளார்.