வெண்ணிலா கபடி குழு படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் விஷ்ணு விஷால், 2009ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விஷ்ணுவிற்கு சிறந்த ஓப்பனிங்காக அமைந்தது. அதன் பின்னர் பலே பாண்டியா, குள்ள நரி கூட்டம், முண்டாசுப்பட்டி உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. கிரிக்கெட் விளையாட்டு வீரரான விஷ்ணு, கிரிக்கெட் வீராராகவே நடித்த ஜீவா படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்ததோடு மட்டுமல்லாது, வசூல் ரீதியாவும் பட்டையைக் கிளப்பியது. சமீபத்தில் விஷ்ணு விஷால் நடித்த திரில்லர் படமான ராட்சசன் வசூலில் அதிரடி காட்டியதோடு, பல்வேறு விருதுகளையும் பெற்று வருகிறது. 

பிரபல நடிகரான விஷ்ணு விஷால், 2011ம் ஆண்டு தனது கல்லூரி தோழியான ரஜினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் தம்பதிக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் திடீர் என ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவரும் விவகாரத்து பெற்றனர். ஓராண்டாக பிரிந்திருந்த இருவரும் சட்டப்படி டைவர்ஸ் பெற்றதாக விஷ்ணு விஷாலே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இதுவரை விவகாரத்து பெற்றதற்கான காரணம் குறித்து மனம் திறக்காத விஷ்ணு விஷால், தற்போது அதற்கான காரணத்தை முதன் முறையாக தெரிவித்துள்ளார். ஹீரோ என்பதால் படங்களில் நடிக்கும் போது ஹீரோயின்களுடன் காதல் காட்சிகளில் நடிப்பது, நடிகைகளுடன் பழகுவது போன்றவை சாதாரணம். ஆனால் இவற்றை எல்லாம் தவறாக நினைத்து விஷ்ணுவின் மனைவி சந்தேகப்பட்டதாகவும், அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே விவகாரத்து பெற்றதாகவும் கூறியுள்ளார்.