சிறு பட வெளியீட்டை ஒழுங்குபடுத்தும் தயாரிப்பாளர் சங்கக் குழு நேற்றோடு கலைக்கப்பட்டது என்ற செய்தியைத் தொடர்ந்து அக்கூட்டத்தில் ஆவேசமாகக் கெட்டவார்த்தையை உதிர்த்தபடி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் வெளியேறிய தகவல் பரபரப்பாகியுள்ளது.

டிசம்பர் 21 ரிலீஸ் படங்களின் மோதலில் தனுஷ் திடீரென உள்ளே புகுந்தது தொடர்பாகவும், அதனால் ஏற்பட்ட கொந்தளிப்புகளையும் ஏற்கனவே எழுதியிருந்தோம். நேற்று இது தொடர்பாக நடந்த கூட்டத்தில் துவக்கம் முதலே கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. பட ரிலீஸை நெறிப்படுத்தும் செயலில் தயாரிப்பாளர் சங்கம் ஒருமுறை கூட வெற்றியடைய முடியவில்லை எனும்போது ‘மார் 2’ மீது மட்டும் இவ்வளவு வெறுப்பு காட்டுவது ஏன் என்று தனுஷ் ஆதரவாளர்கள் சவுண்டு விட, ‘இப்பக் கூட இதை சரி செய்யலைன்னா இந்த ஜன்மத்துல சிறு படங்களைக் காப்பாத்த முடியாது’ என்று தனுஷ் பட ரிலீஸ் எதிர்ப்பாளர்கள் குரல் கொடுக்க, அடுத்து கைகலப்பு நடக்காத குறைதான்.

அடுத்து விவகாரம் இவ்வளவு குளறுபடியானதற்கு முழுக்காரணகர்த்தா விஷால்தான் என்றும் தன் சொந்தப்பட ரிலீஸுக்காக அவர் விதியை மீற ஆரம்பித்தபோதுதான் சங்கத்தை மற்றவர்கள் மதிக்காமல் போனார்கள் என்று சிலர் குரல் கொடுக்கவே, பெரும் டென்சனான விஷால், ...போங்கய்யா .... போச்சி’ என்று ஒரு மூன்றெழுத்து கெட்ட வார்த்தையை உதிர்த்துவிட்டு ஆவேசமாக வெளியேறினார்.

தலைவர் அந்தஸ்தில் இருந்துகொண்டு சற்றும் பொறுபில்லாமல், விஷால் இப்படி வெறுப்புடன் வெளியேறியதைக் கண்டு ‘பொடிப்பயலுக கிட்ட பெரிய பதவியைக்கொடுத்த என்ன நடக்கும்னு சரியா நிருபிச்சாட்டார்யா இந்த விஷாலு’ என்று புலம்பி வருகிறார்கள் மூத்த தயாரிப்பாளர்கள் சிலர்.