அதிரடி ஆக்‌ஷன் படங்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு திடீரென ரஜினி ஸ்டைலில் ஆன்மிக ஆக்‌ஷன் படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார் விஷால். பிரபல அமானுஷ்ய கதை எழுத்தாளர் இந்திரா சவுந்திரராஜன் எழுதியுள்ள நாவலைத் தழுவி எடுக்கப்படவுள்ள இப்படத்தை பிரபல இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கவுள்ளார்.

’நாடோடிகள் 2’ படத்தை சமுத்திரக்கனி இயக்க, சசிகுமார், அஞ்சலி, பரணி, அதுல்யா ரவி ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் எஸ்.எஸ்.ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’உட்பட  பல படங்களில் முக்கியக் கதாபாத்திரத்திலும் சில படங்களில்  நாயகனாகவும், நடித்து வரும் சமுத்திரக்கனி இயக்கும் புதிய படம் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. இந்திரா சவுந்தர்ராஜன் எழுதிய’ சிவம்’ என்ற ஆன்மிக நாவலை படித்த சமுத்திரக்கனி இந்த கதைக்கு விஷால் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்து அவரிடம் கதையைக் கூறியுள்ளார்.

நாவலை வாங்கி உதவியாளர்கள் தயவுடன் படித்த விஷாலுக்கும் அந்தக் கதை பிடித்துவிட, உடனே அந்தக் கதையைத் திரைப்படமாக்க உரிமை பெற்றுள்ளார். இந்த திரைப்படம் ஓர் ஆன்மிக ஆக்‌‌ஷன் திரைப்படம் என கூறப்படுகிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் பங்குபெற உள்ள கலைஞர்கள் பற்றிய விவரம் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிரடி ஆக்‌ஷனிலிருந்து ஆன்மிக ஆக்‌ஷனுக்கு ஷிஃப்ட் ஆனால் அடுத்த ரஜினியாகிவிடலாம் என்று விஷால் கணக்குப்போடுவதாகத் தெரிகிறது.