நடிகர் சங்கத் தேர்தல் நாளை நடைபெறலாம் என்று திடீரென சென்னை உயர்நீதி மன்றம் அறிவித்திருக்கும் நிலையில் விஷால் அணியினர் இன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்ச்செல்வத்தைச் சந்தித்து தேர்தல் அமைதியாக நடக்க தகுந்த பாதுகாப்புகள் வழங்கும்படி கேட்டுக்கொண்டனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துவருகின்றன. இரு தினங்களுக்கு முன் நடிகர் சங்கத்தேர்தல் தொடர்பான பதிவாளர் தேர்தலை நாளை நடத்த தடைவிதித்ததோடு,  முறைகேடாக வாக்காளர்களை நீக்கியது, பதவி காலம் முடிந்தும் நீடித்தது என பாண்டவர் அணி மீது கண்டனமும் தெரிவித்திருந்தார். இதனால் பாண்டவர் அணியைச் சேர்ந்த விஷால், நாசர் ஆகியோர் உள்நோக்கத்துடன் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக குற்றம் சாட்டினர். மேலும் விஷால் தரப்பில் உயர் நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு முன்பு இந்த முறையீட்டை முன்வைத்து அவசர வழக்காக இதனை எடுத்துக் கொள்ள வேண்டுமென முறையிட்டனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று மாலை தேர்தல் நடத்துவது குறித்து நடந்த வழக்கில் வருகின்ற 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை நடத்திக் கொள்ளலாம், ஆனால் வாக்குகளை எண்ணக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நடத்துவதில் எவ்வளவு பொருள் செலவு, நிதிச் செலவு ஏற்படும் என்று அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது ஏன் தேர்தலை ரத்து செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டனர். மேலும், தேர்தலை நடத்திக் கொள்ளலாம். ஆனால், வாக்குகளை எண்ணக் கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள் ஜூலை 8ஆம் தேதி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.திட்டமிட்டபடி வருகின்ற 23ம் தேதி தேர்தல் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தும் இடம் தொடர்பாக பரிசீலனை நடைபெற்று வருகிறது. தற்போது தேனாம்பேட்டை ஒய்.எம்.சி.ஏ அல்லது மயிலாப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் நடத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக முதல்வர் எடப்பாடியை சந்திக்க அனுமதி கேட்டப்போது சரியான பதில் கிடைக்காததால், இரட்டைத் தலைமையை மனதில் கொண்டு விஷால் அணியினர் ஓ.பிஎஸ்சை சந்தித்திருப்பதாகத் தெரிகிறது. தமிழக அரசு தங்கள் அணிக்காக எதிராக செயல்பட்டு வருகிறது என்று விஷால் அணியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.