கோடம்பாக்கத்தில் இன்றைய தேதிக்கு பஞ்சாயத்து இல்லாத படமே இல்லை என்கிற நிலையில் விஷால் நடிப்பில் இன்று வெளியாவதாக இருந்த‘அயோக்யா’ படம் கடைசி நிமிடத்தில் ஜகா வாங்கிவிட்டது. படம் ரிலீஸாவதற்காக அதிகாலை வரை நடந்த பேச்சு வார்த்தைகளும் பலனளிக்கவில்லை.

.ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்குநராக அறிமுகமாகும் படம் `அயோக்யா'. விஷால் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், படம் இன்று (மே 10) திரைக்கு வர இருந்தது.

ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் கடைசி நேரத்தில் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தயாரிப்பாளரின் முந்தைய பட பாக்கியை செலுத்திய பிறகே படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்றும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

எதிர்பாராத காரணங்களால் படம் தள்ளிப்போய்விட்டது என்று தயாரிப்பாளர் தரப்பில் ஒற்றை வரியில் தகவல் சொல்லப்பட்ட நிலையில் படத்தின் நாயகன் விஷால்தான் இந்த ரிலீஸ் தள்ளிப்போனதற்கு வில்லனாக விளங்கினார் என்கிறது படத்தயாரிப்பு வட்டாரம். இப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது அளவுக்கு அதிகமாக கால்ஷீட் குளறுபடிகள் செய்து படத்தின் பட்ஜெட் பல மடங்கு அதிகமாகக் காரணமானவரே விஷால்தான் என்றும் அவர் படத்தின் நஷ்டத்தைச் சரிக்கட்ட வாங்கிய சம்பளத்தில் பாதியை திரும்பச் செலுத்தச்சொல்லி தயாரிப்பாளர் தரப்பு வற்புறுத்திவருவதாகவும் தகவல்.