வரலட்சுமி தனது நெருங்கிய தோழி என்று கூறியுள்ள நடிகர் விஷால், நேரம் வரும் போது திருமண அறிவிப்பை வெளியிடுவதாக கூறியுள்ளார். 

சினிமா பிரபலங்கள் என்றாலே கிசுகிசுக்களுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் சமீபத்தில் அதிகம் அதிகமாக கிசுகிசுக்கப் பட்டவர்களில் விஷால், வரலட்சுமிக்கும் முக்கிய இடம் உண்டு. சண்டக்கோழி இரண்டு படத்தில் இணைவரும் இணைந்து நடித்தனர். தற்போது விஷால் பல்வேறு படங்களில் பிசியாகி விட்ட நிலையில், வரலட்சுமி சரத்குமாரும் நடிகர் விஜயின் சர்கார் படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். 

செல்லமே படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்த விஷாலின் வளர்ச்சி அபரிமிதமானது. திமிரு, சண்டக்கோழி படங்களின் மூலம், தமிழ் திரையுலகிற்கு புதிய ஆக்‌ஷன் ஹீரோ கிடைத்து விட்டார் என்று ஊடகங்கள் கொண்டாடியது விஷாலைத் தான். 

பின்னர் திரையுலக அரசியலில் கொடி நாட்டினார் விஷால், முதலில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆனார். பின்னர் தயாரிப்பாளர் சங்கத்தையும் தன் வசமாக்கிக் கொண்டார். நடிகர் சங்கக் கட்டிடம் கட்டிய பின்னர் தான் திருமணம் என்று பகிரங்கமாக அறிவித்தார் விஷால். 

இந்த நிலையில், நடிகர் விஷாலும், வரலட்சுமி சரத்குமாரும், காதலிப்பதாகவும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஊகங்களை ஊர்ஜிதமாக்கும் வகையில், மதகஜராஜா, சண்டக்கோழி இரண்டு ஆகிய படங்களிலும் வரலட்சுமியை முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க வைத்தார் விஷால். 

மேலும் திருமண விழாக்கள், முக்கிய நிகழ்ச்சிகளிலும் வரலட்சுமியுடன் ஜோடி சேர்ந்து சுற்றித் திரிந்தார் விஷால் .

கிசுகிசுப்புகள் அதிகரிக்கவே, வரலட்சுமியுடனான உறவு குறித்து அவர் மனம் திறந்துள்ளார். வரலட்சுமியை சிறு வயது முதலே தனக்குத் தெரியும் என்றும், வரலட்சுமி தனது நெருங்கிய தோழி எனவும் தெரிவித்துள்ளார். மேலும் திருமணம் குறித்து நேரம் வரும் போது அறிவிப்பதாகவும், யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்பது அப்போது தெரியும் என்றும் கூறியுள்ளார் விஷால்.