நடிகர் விஷால் நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை நிர்வகித்து வந்த ரம்யா என்கிற பெண், சிறுக சிறுக 45 லட்சம் மோசடி செய்துள்ளதாக கடந்த 3 நாட்களுக்கு முன் , மேலாளர் ஹரி கிருஷ்ணன் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார்.

தமிழ் திரையுலகத்தில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஷால், தன்னுடைய தந்தையை தொடர்ந்து, சில படங்களை தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார். 

விஷால் பிலிம் பேட்டரி என்கிற பெயரில் இயக்கும் இந்த நிறுவனம், சென்னை வடபழனி குமரன் காலனியில் உள்ளது. இதில், சாலிகிராமத்தை சேர்ந்த ரம்யா என்கிற பெண் கணக்காளராக கடந்த 5 வருடங்களாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதலே விஷால் ஃபிலிம் பேட்டரி வருமான வரித்துறைக்கு கட்ட வேண்டிய டிடிஎஸ் தொகை, காணாமல் போவதாக கூறப்பட்டு வந்தது.

இதையடுத்து நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இது குறித்து, சோதனை செய்ததில், கணக்காளர் ரம்யா அரசுக்கு கட்ட வேண்டிய டிடிஎஸ் தொகையை தன்னுடைய கணவர் வங்கி கணக்கிற்கும், குடும்ப உறுப்பினர் ஒருவருவரின் வங்கி  கணக்கிற்கும் அனுப்பியது கண்டு பிடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து விஷால் பிலிம் பேட்டரி நிறுவனத்தின் மேலாளர் ஹரி கிருஷ்ணன் இது குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் மோசடி செய்த ரம்யாவை கைது செய்ய வேண்டும் என்றும், மோசடி செய்த 45 லட்ச ரூபாயை பெற்று தர வேண்டும் என்றும்  கூறப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து,விருகம்பாக்கம் போலீசார் விஷாலின் தாயரிப்பாளர் அலுவலகத்தில் வேலை செய்தவர்களிடம் விசாரித்தனர். இதன் அடிப்படியில் கணக்காளர் ரம்யா மீது, மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தது உட்பட நான்கு வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.