vishal auditor went to income tax office and give explanation

விஷால் ஃபிலிம் ஃபேக்ட்ரி நிறுவனத்தின் ஊழியர்களிடம் 51 லட்சம் ரூபாய் வரி பிடித்தம் செய்து அதை கட்டத் தவறியது தொடர்பாக நடிகர் விஷாலுக்கு வருமான வரித்துறை அனுப்பிய சம்மனுக்கு அவரது ஆடிட்டர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷாலின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்ட்ரி’ சென்னை வடபழனியில் அமைந்துள்ளது.

இந்த அலுவலகத்தில் கடந்த 23 ஆம் தேதி மூன்றரை மணி நேரம் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையை ஜிஎஸ்டியின் நுண்ணறிவு பிரிவினர்தான் மேற்கொண்டதாகக் கூறப்பட்டது.

ஆனால் இந்த தகவலை பின்னர் ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு மறுத்தது. விஷால் அலுவலகத்தில் சோதனை நடத்திய அதிகாரிகள் யார் என்பதில் குழப்பம் நிலவி வந்த நிலையில், சோதனையை மேற்கொண்டது வருமான வரித்துறையின் ஒரு அங்கமான செலவை மதிப்பிட்டு, வரியை கணக்கிடும் டிடிஎஸ் பிரிவு என்பது பின்னர் தெரிய வந்தது.

இந்த சோதனையின்போது விஷாலின் நிறுவனம் வரிப்பிடித்தம் செய்ததில் 51 லட்ச ரூபாய் வரை அரசுக்கு செலுத்தவில்லை என்று தெரிய வந்தது.

இது குறித்து இன்று நேரில் ஆஜராக விளக்கம் அளிக்க வேண்டும் என விஷாலுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது. அதில் விஷாலின் திரைப்பட தயாரிப்பு நிறுவன வங்கி கணக்கு புத்தகத்துடன் இன்று நேரில் ஆஜராகுமாறு வருமான வரித்துறை உத்தரவிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது..

இந்நிலையில் விஷாலின் ஆடிட்டர் Sridhar வங்கிக் கணக்கு புத்தகத்துடன் வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.