நடிகர் சங்கக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா முடிந்தவுடன் தான் திருமணம் என்று அறிவித்திருந்த நடிகர் விஷால் கட்டிடப் பணிகள் இன்னும் முற்றுப்பெறாத நிலையில் தனது திருமணத் தேதியை அறிவித்திருக்கிறார்.

நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ஆகிய இரு பதவிகளுக்கும் போட்டியிடும்போது எண்ணற்ற வாக்குறுதிகளை அளித்த விஷால் பதவிக்கு வந்து எவ்வளவோ காலமாகியும் அவற்றில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை என்று அவரது எதிரணியினர் தொடர்ந்து புகார் கூறிவருகின்றனர். தயாரிப்பாளர் சங்கத்தில் இவரது மோசமான செயல்பாடுகளைக் காரணம் காட்டி தமிழக அரசு தயாரிப்பாளர் சங்கத்தைக் கைப்பற்றி அசிங்கப்படுத்தியது. அதை எதிர்த்துக் கோர்ட்டுக்குப் போன விஷாலின் முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் நடிகர் சங்கத்துக்குப் போட்டியிட்ட போது அவர் அளித்த முக்கிய வாக்குறுதியான ‘கட்டிடம் கட்டி முடிக்காம கல்யாணம் கட்டிக்க மாட்டேன்’ என்ற அவரது வாக்குறுதியையும் அப்பட்டமாக மீறியிருக்கிறார். தமிழக அரசின் மீது தொடுத்த வழக்குக்காக கோர்ட்டுக்கு வந்த நிருபர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர் ஏர்கனவே நிச்சயம் செய்யப்பட்ட அனிஷாவுடன்  தனக்கு அக்டோபர் 9ம் தேதி திருமணம் நடக்கவிருப்பதாக அறிவித்தார். ஆனால் நடிகர் சங்க நிர்வாகிகள் சமீபத்தில் தெரிவித்த கருத்துப்படி கட்டிடம் முழுமைபெற குறைந்த பட்சம் இன்னும் ஒரு வருடமாவது ஆகும் என்று தெரிகிறது.

அடுத்து மறுபடியும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று கேட்கப்பட்டபோது,’ அதைப் பற்றி இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. ஆனால் எடுத்த காரியம் எதையும் பாதியில் விட்டுச் செல்லும் வழக்கம் இந்த விஷாலுக்குக் கிடையாது’ என்று பஞ்ச் டயலாக் பேசினார்.