நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிப்பது பற்றி முக்கிய அப்டேட்டை நடிகர் விநாயகன் வெளியிட்டு இருக்கிறார்.
Jailer 2 movie update : நெல்சன் இயக்கிய பிளாக்பஸ்டர் படமான ஜெயிலரின் இரண்டாம் பாகமான 'ஜெயிலர் 2' தற்போது தயாராகி வருகிறது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு பாலக்காடு அட்டப்பாடியில் நடந்தது. பின்னர் கோழிக்கோட்டிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. விஜய் சேதுபதியும் இப்படத்தில் இணைவார் என சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இதில் முத்துவேல் பாண்டியன் என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார்.
2023-ல் வெளியான ஜெயிலர், உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கு மேல் வசூலித்தது. படத்தின் வெற்றிக்குப் பிறகு ரசிகர்கள் இரண்டாம் பாகத்திற்காக காத்திருந்தனர். ஜனவரி 14 அன்று ஒரு ப்ரோமோ வீடியோவுடன் இரண்டாம் பாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்கியது. தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஓப்பனிங் பெறும் படமாக ஜெயிலர் 2 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் ரவிச்சந்தர் தான் இரண்டாம் பாகத்திற்கும் இசையமைக்கிறார்.

ஜெயிலர் 2-வில் விநாயகன்
முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் ஆக்ஷன் காட்சிகளுக்குப் பஞ்சமிருக்காது. இரண்டாம் பாகத்தில் மோகன்லாலின் மேத்யூ என்ற டான் கதாபாத்திரம் இருக்குமா என்பதே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. ஜெயிலர் 2-வில் மோகன்லால் நடிப்பார் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் நடிகர் மோகன்லால் படப்பிடிப்பில் இணைவார் என கூறப்படுகிறது.
ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்திற்கு இணையாகப் பேசப்பட்டவர் மலையாள நடிகர் விநாயகன். இந்நிலையில், அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிப்பதை அவர் உறுதி செய்துள்ளார். முதல் பாகத்திலேயே ரஜினிகாந்த் கொலை செய்த விநாயகன் கேரக்டர் இரண்டாம் பாகத்தில் எப்படி இடம்பெறும் என பலரும் கன்பியூஸ் ஆகினர். அநேகமாக படத்தில் ஃபிளாஷ்பேக் காட்சி இருக்க வாய்ப்பு உள்ளது. அதில் அவர் தோன்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


