விஜய்யுடன் மீண்டும் கூட்டணி சேரும் வில்லன் நடிகர்... தளபதி 64 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்...!

தீபாவளியை முன்னிட்டு அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் செய்து வருகிறது. இதையடுத்து‘தளபதி 64’படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.  XB கிரியேட்டர்ஸ் தயாரிக்கும் அந்த படத்தை, மாநகரம், கைதி படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். ‘பிகில்’ திரைப்படத்தை போன்றே ‘தளபதி 64’ படத்தில் நடிப்பவர்கள் குறித்த அதிரடி அறிவிப்புகள் நாள்தோறும் வெளியிடப்படுகின்றன. 

இதுவரை விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தனு, ‘அங்கமாலி டைரீஸ்’ ஆண்டனி வர்கீஸ், கெளரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அக்டோபர் முதல் வாரத்தில் பூஜையுடன் ஆரம்பித்த ‘தளபதி 64’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு,  22 நாட்களுக்குப் பிறகு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் தொடங்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக தளபதி 64 படத்தின் அப்டேட் குறித்து, தயாரிப்பு நிறுவனம் நாள்தோறும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி தளபதி 64 படத்தில் பிரபல வில்லன் தீனா நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய் - அட்லீ கூட்டணியில் வெளி வந்த தெறி திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார் தீனா. அதில் விஜய்யை பார்த்து ”திரும்ப உன்ன பார்த்தேன், அப்படியே வாரி வாய்ல போட்டுக்குவேன்னு” பேசின வசனம் டிக்டாக்கில் மிகவும் பிரபலமானது. அதைத்தொடர்ந்து, பிகில் திரைப்படத்திலும் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு தீனாவிற்கு கிடைத்தது. அதே வரிசையில் தற்போது தளபதி 64 படத்திலும் விஜய் உடன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.