பிகில் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, விஜய் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தளபதி 64 படம் தயாராகி வருகிறது. கைதி, மாநகரம் போன்ற வித்தியாசமான படங்களை இயக்கி, சூப்பர்  ஹிட் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் கூட்டணி அமைத்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எனவே நாள்தோறும் படம் குறித்த அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்தப்படத்தில் ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். வில்லனாக 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கிறார்.தளபதி-64 படத்திற்கு 'ராக் ஸ்டார்' அனிருத் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் 2-வது கட்ட ஷுட்டிங், கடந்த நவம்பர் 1ம் தேதி டெல்லியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

 கடந்த வாரம் முதல் ஹீரோயின் மாளவிகா மோகனன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். மேலும், '96' புகழ் கவுரி கிஷான், மலையாள நடிகை லிண்டு ரோணி, வி.ஜே.ரம்யா என அழகு தேவதைகளும் 'தளபதி-64' படத்துக்காக டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அவர்களுடன் சேத்தன், சஞ்சீவ், பிரேம், ஸ்ரீநாத் என மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாங்களே படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளது.

மேலும் ஆண்ட்ரியா, சாந்தனு, ‘அங்கமாலி டைரீஸ்’ ஆண்டனி வர்கீஸ், ஸ்ரீமன், தீனா, பிரகிதா என பட்டியல் ரொம்ப பெரிசா நீண்டு கொண்டே போகிறது. இந்நிலையில் "விக்ரம் வேதா" படத்தில் மாதவன் நண்பராக நடித்த பிரேம்குமார் தற்போது இணைந்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தளபதி 64 படத்தில் இணைந்தது மகிழ்ச்சி, மீண்டும் தளபதியுடன் சேர்ந்து நடிப்பதில் மிக்க மகிழ்ச்சி, எனக்கு இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். பிரேம் குமாருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள விஜய் ரசிகர்கள், "தளபதி 64" படத்தில் 1000 பேர லோகேஷ் கனகராஜ் இறக்கப் போறார் போல என கமெண்ட் செய்துள்ளனர்.