vikram international rowdy 2017 movie

'சீயான்' விக்ரம் நடிப்பில் வெளியாகி, பாக்ஸ் ஆபிசில் கோடிக்கணக்கில் வசூலித்து, பாக்ஸ்ஆபிஸ் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் நூறு கோடி கிளப்பில் லேட்டஸ்ட்டாக இணைந்த படம் 'இருமுகன் '. 

இந்தபடம் ஹிந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டு பிரபல தனியார் தொலைகாட்சியில் அண்மையில் ஒளிபரப்பானது. அதன் பின்னர் யூடியூப் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டது. பதிவேற்றப்பட்ட இரண்டு நாளில் ஐந்து மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று புதிய சாதனையை படைத்திருக்கிறது.

மணிரத்னம் இயக்கிய ‘ராவண் ’ படத்தில் நடித்ததன் மூலம் ஹிந்தியிலும் தனக்கான ரசிகர்களை உருவாக்கியவர் விக்ரம். அதனைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கிய ‘ஐ ’படத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்புத்திறமையை காட்டி பாலிவுட் டின் முன்னணி நடிகர்களை ஆச்சரியப்படுத்தினார். 

அனைத்து ஊடகங்களும் சிறந்த நடிப்பிற்கான தேசிய விருது விக்ரமுக்கு கிடைக்கும் என்று பதிவு செய்தது. இதில் உச்சமாக மும்பையிலிருந்து வெளியாகும் முன்னணி பத்திரிக்கையொன்று இவரை ‘இந்தியாவின் மெல்கிப்சன் ’என்றும் பாராட்டியது. அதைத் தொடர்ந்து விக்ரம் நடித்த படங்கள் அனைத்தும் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யூடியூப்பில் பதிவேற்றப்பட்டது. அதற்கு இரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வரிசையில் தற்போது விக்ரம் இரட்டை வேடத்தில் நடித்த ‘இருமுகன் ’என்ற படம் ‘இண்டர்நேஷனல் ரவுடி 2017 ’ என்ற பெயரில் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யூடியுப்பில் வெளியானது. 

வெளியான நாற்பத்தெட்டு மணி நேரத்தில் ஐந்து மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்திருக்கிறது. அதிலும் நேபாளம், வங்காளதேசம் போன்ற தெற்காசிய நாடுகளில் இந்த படத்தை லட்சகணக்கானவர்கள் பார்த்து பாராட்டியிருக்கிறார்கள். 

இதன் மூலம் விக்ரமின் நடிப்பு திறமையை தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பிற மாநில எல்லைகளைக் கடந்து, இந்தியாவின் எல்லையும் கடந்து தெற்காசியா முழுமைக்கும் பரவியிருக்கிறது என்பது நிரூபணமாகிறது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘துருவ நட்சத்திரம் ’,‘ஸ்கெட்ச் ’ மற்றும் ‘சாமி 2 ’ஆகிய படங்களைப் பற்றிய எதிர்பார்ப்பு உலகளவில் ஏற்பட்டிருக்கிறது. 

இதில் துருவ நட்சத்திரம் படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார். ஸ்கெட்ச் படத்தை விஜய் சந்தர் இயக்கி வருகிறார். ‘சாமி 2 ’படத்தை இயக்குநர் ஹரி இயக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.