'கடாரம் கொண்டான்' படத்தை தொடர்ந்து, நடிகர் சியான் விக்ரம், தற்போது இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இது, அவர் நடிக்கும் 58-வது படமாகும். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்தில், 10க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் விக்ரம் நடிக்கிறார். 

'கே.ஜி.எஃப்' புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், முக்கிய ரோலில் நடிக்கிறார். திரையுலகில் அவர் அறிமுகமாகும் முதல் படம் இது. 

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வரும் 'சியான் விக்ரம்-58' படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
தற்போது, இந்தப் படத்தின் ஷுட்டிங், கேரளாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், பிரபல இயக்குநர் ஒருவரும் படத்தில் இணைந்துள்ளார். அவர் வேறுயாருமல்ல. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்தான். 

ஏற்கெனவே, விக்ரமுடன் 'அருள்' படத்தில் அவர் இணைந்து நடித்திருந்தார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தப் படத்தில்தான் மீண்டும் விக்ரமுடன் கே.எஸ்.ரவிக்குமார் இணைந்துள்ளார். 

இந்நிலையில், படத்தில் சியான் விக்ரம் நடிக்கும் புதிய கெட்டப் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. 

கேரள மாநிலம் அலிபி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கிருஷ்ணன் கோயில் ஒன்றில் படத்தின் ஷுட்டிங் நடைபெற்று வருகிறது. இந்தப் படப்பிடிப்பில், குர்தா வேஷ்டி மற்றும் சில்க் சட்டையுடன் விக்ரம் பக்தி பழமாக மாறி காட்சி தருகிறார். அப்போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

கிருஷ்ணன் கோயிலில் ஒரு பாடல் காட்சி மற்றும் சில வசனக்காட்சிகள் படமாக்கப்படுவதாகவும், அங்கு ஒரு வாரம் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து கொச்சியில் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். 
மிகுந்த பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக உருவாகும் 'சியான் விக்ரம்-58' படம், வரும் 2020ம் ஆண்டு வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.