விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘படை தலைவன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சண்முகப் பாண்டியன் நடிக்கும் ‘படை தலைவன்’
மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் தற்போது படங்களில் நடித்து வருகிறார். ‘மதுரை வீரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் நடிப்பில் உருவாக்கியுள்ள திரைப்படம் தான் ‘படை தலைவன்’. ‘வால்டர்’, ‘ரேக்ளா’ ஆகிய படங்களை இயக்கிய யு.அன்பு இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் எம்.எஸ். பாஸ்கர், முனீஸ் காந்த், யாமினி சந்தர், கஸ்தூரிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘டிரைக்கடர்ஸ் சினிமாஸ்’ தயாரித்துள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
‘படை தலைவன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
யானைக்கும், மனிதனுக்கும் இடையேயான பாசப் போராட்டமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படம் மே 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிப் போய் இருந்தது. இந்த நிலையில் படம் வருகிற ஜூன் 13ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை கேப்டன் சினி க்ரியேஷன்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் 500 திரையரங்குகளில் வெளியிடுகிறது. புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் அதிரடி சம்பவங்களுடன் இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
AI தொழில்நுட்பத்தில் விஜயகாந்த்
இந்தத் திரைப்படம் தமிழ் சினிமாவிற்கு புதிய பரிமாணத்தை வழங்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அடர்ந்த வனப்பகுதிகள், காட்டு யானைகள் மற்றும் வனத்தில் வாழும் மனிதர்களின் தனித்துவமான வாழ்வியலை யதார்த்தமாகவும், உணவுப்பூர்வமான காட்சிகளுடனும் ஒரு திரில்லர் படமாக ‘படை தலைவன்’ உருவாகி உள்ளது. ‘மதுரை வீரன்’ திரைப்படத்திற்குப் பின்னர் சண்முக பாண்டியன் ஒரு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் மிக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் மறைந்த விஜயகாந்த் தோற்றம் AI தொழில்நுட்பத்தின் மூலம் இந்த படத்தில் இடம்பெற உள்ளது.
தமிழ் சினிமாவின் சிறந்த படைப்பாக அமையும்
இளையராஜாவின் இசை படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கதையின் உணர்வுபூர்வமான ஆழத்தையும், காடுகள் மற்றும் விலங்குகளுடன் மனிதர்களுக்கு உள்ள கலாச்சார பிணைப்பையும் இளையராஜாவின் இசை அழகாக எடுத்துக்காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த திரைக்கதை, தொழில்நுட்ப ஆதரவு, தனித்துவமான நடிப்பு, இளையராஜாவின் இசை ஆகியவற்றுடன் ‘படை தலைவன்’ திரைப்படம் தமிழ் சினிமாவிற்கு சிறந்த படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜயகாந்தின் ரசிகர்கள் ‘படை தலைவன்’ திரைப்படம் வெற்றி பெற தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
