இன்னும் ஒரு சில தினங்களில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது சிகிச்சை தொடர்பாக மீண்டும் அமெரிக்கா செல்லக்கூடும் என்று கேப்டனின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் அமெரிக்காவில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார். கடந்த பிப்ரவரி 16-ந்தேதி சென்னை திரும்பிய விஜயகாந்த் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். ஆனால் அவர முழு ஓய்வு எடுக்கவிடாமல் அரசியல் நிகழ்வுகள் அத்தனையும் அவரை மையப்படுத்தியே நடந்தன.பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நெருக்கியடித்ததால்  கூட்டணி தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் அவரை வீட்டில் சந்தித்து பேசினார்கள். 

இந்த கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இதோ வருகிறார் அதோ வருகிறார் என்று பூச்சாண்டி காட்டப்பட்டு ஒரே ஒரு நாள் மட்டும் கடமைக்காக பிரச்சாரம் மேற்கொண்டார். அந்தப் பிரச்சாரத்திலும் விஜயகாந்த்துக்கு பேசுவதில் சிரமம் ஏற்பட்டது.  வேனில் இருந்தபடியே ஓரிரு நிமிடங்கள் மெதுவாக பேசி சென்றார்.

இந்த நிலையில் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா செல்கிறார் என்றும், அடுத்து நடக்கவிருக்கும் 4 சட்டசபை இடைத்தேர்தல்களுக்கு அ.தி.மு.க. ஒருவேளை பிரச்சாரத்திற்கு அழைத்து தொந்தரவு செய்யக்கூடும் என்பதால் இந்த அமெரிக்கப் பயணம் மிக விரைவில் இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.