விஜய் தொலைக்காட்சி ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற காமெடி நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் மூலம் அறிமுகமானவர் வடிவேல் பாலாஜி. அச்சு அசலாக கெட்டப்பில் மட்டுமல்லாது, மாடுலேஷன், டைலாக் டெலிவரி, பாடி லாங்குவேஜ் என அப்படியே வடிவேலுவை கண்முன் காட்டியவர். 

இந்த நிகழ்ச்சியில் அவர் வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்களின் மனதில் தனது காமெடியால் தனி இடம் பிடித்தார். 


இந்த நிகழ்ச்சியை முடித்த கையோடு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த  “அது இது எது” நிகழ்ச்சியின் சிரிச்சா போச்சு போர்ஷனில் பங்கேற்று கலக்கினார். அதன் பின்னர் கடைசியாக விஜய் தொலைக்காட்சி தொகுத்து வழங்கிய பல காமெடி நிகழ்ச்சிகள் வடிவேல் பாலாஜி இல்லாமல் ஒளிபரப்பானதே கிடையாது. காமெடி ஷோ என்றாலே வடிவேலு பாலாஜி எங்கே என ரசிகர்கள் தேடும் அளவிற்கு புகழ் பெற்றார்.

ஆரம்பத்தில் பிணவறையில் வேலை பார்த்து வந்த இவர், பின்னர் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியிலும் கவனம் செலுத்தி, சாதித்தார்.  இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் திடீர் மாரடைப்பு காரணமாக இரு கைகளும் வாதம் ஏற்பட்டு முடங்கி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருடைய உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், சென்னை ராஜுகாந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

ஆனால் சிகிச்சை பலனின்றி வடிவேல் பாலாஜி உயிரிழந்தார். தற்போது, இவருடைய உடல், ரசிகர்கள், பிரபலங்கள் மற்றும் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்துவதற்காக சேத்துப்பட்டில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலையும் தாண்டி, விஜய் டிவி பிரபலங்கள் உள்ளிட்ட பலர் நேரில் வந்து தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில், நடிகர் விஜய் சேதுபதி வடிவேல் பாலாஜி உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவருடைய குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கினார். மேலும் நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், நடிகர் உதயநிதி ஸ்டாலின், காமெடி நடிகை ஆர்த்தி, உள்ளிட்ட பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.