கொரோனா தொற்றால் அடுத்தடுத்து திரைப்பிரபலங்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. பாலிவுட்டில் பிரபல நடிகரான அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆரத்யாவுக்கும், பிரபல தயாரிப்பாளரான போனிகபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர், அவரது காதலி மலைக்கா அரோரா, அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, விஷால், நிக்கி கல்ராணி, பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் பூரண குணமடைந்து மீண்டும் வரும் நிலையில், சிலர் இறந்துவிடுவது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. 

சில நாட்களுக்கு முன்பு கும்கி, தொடரி, புதிய கீதை உள்ளிட்ட படங்களில் நடித்த ப்ளோரண்ட் பெரைரா கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து திரையுலகம் மீண்டு வருவதற்குள் அடுத்து ஒரு துணை நடிகர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் பல படங்களில் சிறிய குணச்சித்திர வேடங்களில் நடித்தவரும் பிரபல எழுத்தாளருமான ரூபன் (54) நேற்று உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். 

விக்ரம் நடித்த தூள் படத்தில் டி.டி.ஆர். வேடத்திலும், விஜய் நடித்த கில்லி படத்தில் நடுவராகவும் நடித்திருப்பார். சினிமா துறையில் ஸ்கிரீன் ரைட்டர் ஆக அவர் அதிகம் பணியாற்றி இருக்கிறார். ஒரு சில படங்களுக்கு கதை ஆசிரியராகவும் அவர் இருந்திருக்கிறார். அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு திரையிலும் தோன்றியுள்ளார். 

 

இதையும் படிங்க: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த பிரபல நடிகரின் மகனும் பங்கேற்கிறாரா?... கமலின் ஸ்பெஷல் பரிந்துரையாம்...!

நுரையீரல் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த ரூபன் நேற்று மாலை 4 மணிக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு காலமானார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். ரூபன் மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.