தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ள நிலையில், 'விஜய்க்கு இது 30 வருட கனவு' என அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Vijay Father SA Chandrasekhar interview : தமிழக வெற்றி கழகம் (தவெக) தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் உள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில், நடிகர் விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், தன் மகனின் இந்த பிரம்மாண்ட அரசியல் வெற்றிப் பயணம் குறித்து திங்கட்கிழமை நெகிழ்ச்சியுடன் பேசினார். 1980-களில் விஜய்யை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய எஸ்.ஏ.சி, கடந்த 30 ஆண்டுகளாகவே தமிழ்நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் விஜய்க்கு இருந்ததாகக் கூறினார். அந்த நீண்ட கால முயற்சியின் விளைவாகவே, இந்தத் தேர்தலில் இத்தகைய அபாரமான வெற்றியை அவரால் பெற முடிந்திருக்கிறது.

விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி

இதுகுறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில், "எனக்கு இது ஒரு உத்வேகமாக இருக்கிறது. ஒரு மனிதன் கலைஞனாக மட்டும் இருக்கக்கூடாது, அவனுக்கு சமூக சிந்தனையும் இருக்க வேண்டும். கடந்த 30 வருஷமாகவே, தமிழ்நாட்டுக்கு ஏதாவது செய்யணும்னு விஜய் மனசுல ஒரு எண்ணம் ஓடிக்கொண்டே இருந்தது. அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, இன்னைக்கு அவரை முதலமைச்சர் ஆக்கப்போகிறது," என்றார்.

மேலும், "2024-ல் கட்சி தொடங்கியதிலிருந்து கடந்த இரண்டு வருடங்களாக, 'நான் முதலமைச்சராக வருவேன்' என்கிற நம்பிக்கை அவரிடம் பிரமாதமாக இருந்தது. அந்த மனப்பான்மையை நான் பாராட்டுகிறேன். ஒரு தலைவராக, யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்து நிற்பேன் என்ற அவரது தைரியம்... இது விஜய்க்கு கிடைத்த ஒரு சரித்திர வெற்றி, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி என்று நான் நினைக்கிறேன்," என்றும் அவர் கூறினார்.

விஜய் மக்களுடன் ஏற்படுத்திக்கொண்ட தொடர்புதான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும் அவரது தந்தை குறிப்பிட்டார். "தமிழ் மக்கள் அவரை ஒரு தலைவராக மட்டும் பார்க்கவில்லை. ஒவ்வொரு வீட்டுப் பெண்ணும் அவரைத் தன் மகனாகப் பார்க்கிறார்கள், மக்கள் அவரைத் தங்கள் சகோதரனாகப் பார்க்கிறார்கள். அறுபது வயது பெரியவர்கள் அவரைத் தங்கள் பேரனாகக் கருதுகிறார்கள். அந்த அளவுக்கு பொதுமக்களுடன் அவர் ஒரு உறவை வளர்த்துள்ளார்," என்றார்.

1984-ல் 'வெற்றி' படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும், 1992-ல் 'நாளைய தீர்ப்பு' படத்தில் கதாநாயகனாகவும் விஜய்யை அறிமுகப்படுத்தியது அவரது தந்தைதான். தன் மகனின் திரைப்பயணம் குறித்துப் பேசிய அவர், "ஒரு அப்பாவாக, என் மகனை அறிமுகப்படுத்துவது என் கடமை. அதை நான் செய்தேன். ஆனால், அவர் தனது சொந்த திறமை, முயற்சி, கடின உழைப்பு மற்றும் ஒழுக்கத்தால் இந்த உயரத்திற்கு வந்துள்ளார். தமிழ் சினிமாவில் எந்த இயக்குநரோ, தயாரிப்பாளரோ அவரைப் பற்றி ஒரு தவறான வார்த்தைகூட சொல்ல மாட்டார்கள். அவரது நேரந்தவறாமை மற்றும் கடின உழைப்பைத்தான் பாராட்டுவார்கள்," என்றார்.

இதற்கிடையில், விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர், "நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்," என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது குறுக்கிட்ட எஸ்.ஏ.சி, "அவர் விஜய்க்கு அம்மா மட்டுமல்ல, விஜய்யின் முதல் ரசிகையே அவர்தான். அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்," என்று சிரித்தபடி கூறினார்.

விஜய்யின் உறவினர் ஒருவரும், "அவர் ஒரு இளம் மற்றும் ஆற்றல்மிக்க தலைவர். அவர் மூலம் தமிழ்நாட்டில் ஒரு பெரிய மாற்றம் வரும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். அவர் நிச்சயமாக எல்லோருக்கும் சிறந்ததைச் செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று தெரிவித்தார்.