படப்பிடிப்பை முடித்து விட்டு, காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த, இரண்டு இளம் நடிகைகள் விபத்தில் சிக்கி மரணமடைந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தெலுங்கு சீரியல்களில் முன்னணி நடிகைகளாக நடித்து வருபவர்கள் அனுஷா ரெட்டி (21 ) மற்றும் பார்கவி (20 ). இவர்கள் இருவரும் அனந்தகிரி வனப்பகுதியில் நடந்த, மெகா சீரியல் ஒன்றிற்காக ஒரே காரில் சென்றிருந்தனர்.

படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ஹைதராபாத்தில் இருந்து காரில் வீடு திரும்பிக் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.  அப்போது விகாராபாத் அருகே கார் வந்துகொண்டிருந்தது. எதிரே வந்த வண்டிக்கு வழி விடுவதற்காக, ஓட்டுநர் காரை வேகமாக திரும்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து கார் ஒரு மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

மோதிய வேகத்தில், கார் அப்பளமாக நொறுங்கியது. இந்த விபத்தில் அனுஷா ரெட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவருடன் பயணித்த சக நடிகை பார்கவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே, உயிரிழந்தார். இவர்களுடன் வந்த ஓட்டுநர் மற்றும் இரண்டு ஆண்கள் பலத்த காயத்துடன் ஹைதராபாத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பார்கவி தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல் 'முத்யால முக்கு' என்கிற தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். 

நடிகை அனுஷா ரெட்டி, தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் நடித்துள்ளார். குறிப்பாக விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில், கார்த்திக்கின் முன்னாள் காதலியாக நடித்தார். பிறகு அந்த தொடரில் இருந்து விலகி மற்றொரு நெடுந்தொடரில் நாயகியாக அறிமுகமானார். தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து வரும் இந்த இளம் நடிகை உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.