மறைந்த சீரியல் நடிகை சித்ரா, கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சியின் புதிய புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக ஊடகத்துறையில் அடியெடுத்து வைத்த சித்ரா, படிப்படியாக உயர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ரசிகர்களின் மனதில் முல்லையாக மனம் வீசிக்கொண்டிருந்த சித்ரா, கடந்த டிசம்பர் மாதம் 9ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது நாம் அறிந்தது தான்.

சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டார். இதனிடையே ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்ய ஸ்ரீ சித்ராவின் குடும்பத்தினர், மாமனார், மாமியர், கணவர் ஹேமந்த், சக நடிகர், நடிகைகள், நண்பர்கள், ஓட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள், சித்துவின் உதவியாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

கிட்டதட்ட 15 பேரிடம் நடத்தப்பட்ட 16 பக்க விசாரணை அறிக்கையை கடந்த மாதம் கோட்டாட்சியர் திவ்ய ஸ்ரீ காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். இதனிடையே சித்ராவின் தாயார் தனது மகளின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டுமென முதல்வரின் தனிப்பிரிவிற்கு மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதுவரை இவரது மரணத்திற்கு மர்மம் விலகாத நிலையில்... அடிக்கடி சித்ராவை நினைவு படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சித்ரா கடைசியாக கலந்து கொண்டது, ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சி என எல்லோரும் நினைத்த நிலையில், ஸ்டார்ட் மியூசிக் பிரீமியர் லீக் என்கிற நிகழ்ச்சிலும் கலந்து கொண்டுள்ளார்.

ஈரமான ரோஜாவே பவித்ரா ஜனனி, ஆயுத எழுத்து சரண்யா, குக் வித் கோமாளி புகழ், மணிமேகலை என பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தான் சித்ரா கடைசியாக கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதே போல் சரண்யாவும் கடைசியாக சித்ரா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போது படபடப்பாகவே இருந்தார் என்றும் தெரிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து தற்போது இந்த நிகழ்ச்சி ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள நிலையில் இது குறித்த புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. 

அந்த புரோமோ இதோ...