கொரோனா தொற்று இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என்றாலும், பொருளாதார ரீதியில் அவஸ்தை படும் மக்களுக்காக, மத்திய மற்றும் மாநில அரசுகள் மெல்ல மெல்ல பல தளர்வுகளை அமல்படுத்தி வருகிறது. இது போன்ற  தளர்வுகளால் கொரோனா தொற்று இன்னும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது என்றாலும், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது.

அதன் முக்கிய பகுதியாக சினிமா படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஷூட்டிங்கிற்கு அனுமதி கொடுக்காமல் வீட்டிற்குள் முடங்கியிருந்த காலத்தில் இருந்தே  ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சிலர் திடீரென இறந்து போக ரசிகர்கள் சோகத்தில் மூழ்குவது தொடர் கதையாகி வருகிறது. 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முக்கிய பிரபலமாக தற்போது பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உள்ளார். ஆரம்ப கட்டத்தில் உடல் நிலை மோசமடைந்த போதிலும் தற்போது இயல்பாக உணவு உட்கொள்ளும் அளவிற்கு தேறிவிட்டார். தற்போது திரையுலகில் கொரோனா தொற்றின் தாக்கம் வீரியம் அடைந்து வருகிறது. 

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலில் முன்னணி நடிகையாக நடித்து வந்த நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் அரண்மனை கிளி. இதில் நடித்து வருபவர் மோனிஷா. இவர் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள மோனிஷா கொரோனா சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த செய்தியைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் மோனிஷா நல்லபடியாக மீண்டு வர  வாழ்த்து கூறி வருகின்றனர்.