’தளபதி 63’படத்துக்கு அடுத்தபடியாக விஜய் ஒரு தெலுங்கு ரீ மேக் படத்தில் நடிக்கவிருப்பதாகவும், அப்படத்தின் ரீ மேக் உரிமைகளைப் பெறுவதற்காக பிரபல தயாரிப்பாளர் ஒருவர் ஹைதராபாத்திலேயே முகாமிட்டிருப்பதாகவும் ஒரு ஆந்திர இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரபல இயக்குநர் வம்சியின் இயக்கத்தில் மகேஷ் பாபுவின் 25 வது படமாக உருவாகியுள்ளது ‘மகரிஷி’.பூஜா ஹெக்டே மகேஷ் பாபுவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். வரும் மே9ம் தேதி  வெளியாக உள்ள இப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நேற்று ஹைதராப்பாத்தில் நடந்தது. 

இவ்விழா குறித்து செய்தி வெளியிட்டிருந்த அந்த இணையதளம், பெயரைக் குறிப்பிடாமல், பிரபல தமிழ்ப்பட தயாரிப்பாளர் ஒருவர் எப்படியாவது ‘மகரிஷி’ தமிழ் ரீ மேக் உரிமையை வாங்குவதற்காக ஹைதராபாத்திலேயே தவம் கிடக்கிறார் என்றும் அவர் தவம் கிடப்பது அப்படத்தை நடிகர் விஜயை வைத்து ரீ மேக் பண்ணவே என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இந்த தவம் விஜய்க்கு தெரிந்து நடக்கிறதா என்பது தெரியவில்லை.

இதே மகேஷ் பாபுவின் ‘ஒகுடு’ படத்தை ‘கில்லி’ என்ற பெயரிலும் ‘போக்கிரி’ படத்தை அதே ‘போக்கிரி’ என்ற பெயரிலும் ரீமேக் செய்து விஜய் நடித்திருக்கிறார். அதில் முதல் படம் சூப்பர் ஹிட்டும், இரண்டாவது படம் சுமார் ஹிட்டும் கண்டன.