நடிகன் என்றால் கோடிகளில் சம்பளத்தை வாங்கி வீட்டுக்குள் பூட்டி வைத்து மக்கள் பிரச்சினகளை  வேடிக்கை பார்ப்பதோடு சரி என்கிற பொதுப்புத்தியிலிருந்து சிலர் பொறுப்புடன் வெளிப்பட ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களில் இன்று சற்றும் யோசிக்காமல் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய முக்கிய நபர் விஜய் சேதுபதி.

கஜா புயல் நிவாரண நிதிக்கு அள்ளி வழங்கிய அவர் இன்று ராஜீவ் கொலைவழக்கில் 28 வது ஆண்டாக சிறையில் வாடித்தவிக்கும் ஏழு பேருக்காக கவர்னரை நோக்கி உரத்த குரல் எழுப்பியிருக்கிறார். 

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் கைதான கொலைக்குற்றவாளிகள் மூன்று பேருக்கு அவசர அவசரமாக விடுதலைப் பத்திரம் வாசித்த கவர்னருக்கு 7பேர் வழக்கில் இவ்வளவு மெத்தனம் ஏன் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துவரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக #28YearsEnoughGovernor என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு அது ட்ரெண்ட் ஆகிவருகிறது.

இந்த ஹேஷ்டேக்கில் தனது குரலை இன்று உரத்துப் பதிவு செய்த விஜய் சேதுபதி... எழுவர் விடுதலை என்பது தமிழர்களின் பிரச்சனை மட்டுமல்ல. இது ஒரு மனித உரிமை பிரச்சனை. இத்தனை ஆண்டுகள் அவர்களை சிறையில் அடைத்து வைத்திருந்தது போதும். அவர்களின் விடுதலை குறித்து உடனடியாக முடிவெடுங்கள் சார்...என்று பதிவிட்டுள்ளார்.