என்னது தெலுங்கில விஜய் சேதுபதிக்கு இவ்வளவு தான் சம்பளமா...? இதுக்கா இவ்வளவு பில்டப்...!

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி, செம பிசியான நடிகர். இமேஜ் பார்க்காமல் எப்படிப்பட்ட கேரக்டர்களிலும் இறங்கி அடிக்க கூடியவர். ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கையாகவும், ‘சீதக்காதி’யில் முதியவராகவும் நடித்து அசத்தி இருந்தார். விக்ரம் வேதாவில் இவர் நடித்த நெகட்டீவ் கேரக்டர் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற, கார்த்திக் சுப்புராஜ் இயக்கி ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கே வில்லனாக நடித்தார். வருடத்திற்கு 5க்கும் மேற்பட்ட படங்களில் பிஸியாக நடிக்கும் விஜய் சேதுபதியை அவரது ரசிகர்கள் ”மக்கள் செல்வன்” என அன்போடு அழைக்கின்றனர். விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சங்கத்தமிழன்’ திரைப்படம் தற்போது வெளியாக உள்ளது. 

தற்போது விஜய் சேதுபதி கைவசம், லாபம், கடைசி விவசாயி, மாமனிதன், ஓ மை கடவுளே ஆகிய படங்கள் உள்ளன. மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 64’படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் விஜய் சேதுபதி. இந்த படம் கோலிவுட் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள நிலையில், விஜய் சேதுபதி நடிப்பால் கவரப்பட்ட டோலிவுட் அவரை அலேக்காக அள்ளிக்கொண்டு போயுள்ளது. முதலில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சிவியின் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தில்  நடித்த விஜய் சேதுபதி, தனது திறமையான நடிப்பால் தெலுங்கு ரசிகர்கள் மனதையும் கொள்ளையடித்தார். தற்சமயம் உப்பென்னா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி, அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக ‘ஏஏ20’ என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இந்தப்படத்தில் நெகட்டீவ் கேரக்டரில் நடிக்க விஜய் சேதுபதிக்கு ரூ.1.5 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹீரோவான விஜய் சேதுபதிக்கு ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. தற்போது விஜய்யுடன் நடிக்க உள்ள ‘தளபதி 64’படத்தில் கூட விஜய் சேதுபதிக்கு ரூ.10 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டோலிவுட் வட்டாரத்தில் என்னவோ வில்லனுக்கு இவ்வளவு சம்பளமா? என வாய் பிளந்தாலும். 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிட்டு இருந்த மனுஷன், ஏன் தெலுங்கில போய் ஒன்றரை கோடி ரூபாய்காக கஷ்டப்படணும் என கோலிவுட வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது.