தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் மூன்று படங்களில் விஜய்யின் ‘பிகில்’படமே சந்தேகத்தில் இருக்கும் நிலையில் விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ ரீலீஸ் மேலும் ஒரு மாதம் தள்ளிப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக இப்போதைக்கு கார்த்தியின் கைதி ரிலீஸ் மட்டுமே உறுதியாகியுள்ளது.

சுரேஷ் காமாட்சி இயக்கியுள்ள ‘மிக மிக அவசரம்’படத்துக்கு முறையான தியேட்டர்கள் கிடைக்காதது தொடர்பாக பேசுவதற்காக இன்று காலை பத்திரிகையாளர்களை அவசர அவசரமாக சந்தித்த தயாரிப்பாளர் லிப்ரா சந்திரசேகர், ‘விளம்பரத்துக்காக மட்டுமே 85 லட்ச ரூபாய்க்கும் மேல் செலவழித்திருக்கும் நிலையில் சென்னையில் ஒரு தியேட்டர் கூட தர மறுக்கிறார்கள். பணம் சம்பாதிப்பதற்காக நான் மிக மிக அவசரம் படத்தை வாங்கவில்லை. அது ஒரு தரமான தமிழ்ப்படம் என்பதற்காக மட்டுமே வாங்கினேன். சிறு படங்களுக்கு தியேட்டர் தருவதில் இங்கே எப்போதும் அநியாயம் நடக்கிறது’என்று கொதித்தார்.

தீபாவளிக்கு வெளியாகவிருந்த சங்கத்தமிழன் படத்தையும் இதே லிப்ரா நிறுவனமே வெளியிடுவதால் அப்பட ரிலீஸ் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் படம் தீபாவளிக்கு வெளியாகவில்லை. நவம்பரில்தான் வெளியாகிறது என்று தெரிவித்தார். விஜயின் ‘பிகில்’படம் தீபாவளிக்கு ரிலீஸாகிறது என்கிற அறிவிப்பும் இதுவரை அதிகார்பூர்வமாக வரவில்லை.