ஆறுமுக குமார் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ஏஸ் திரைப்படம் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது.

Ace Movie OTT Release : தமிழகத்தில் மட்டுமல்ல, தென்னிந்தியா முழுவதும், வடஇந்தியாவிலும் கூட ரசிகர்களை கொண்ட நடிகராக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. 'மகாராஜா', '96' போன்ற வெற்றிப்படங்கள் தவிர, விஜய் சேதுபதி சோலோ ஹீரோவாக நடித்த படங்கள் பெரும்பாலும் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்துகின்றன. அதற்கு சமீபத்திய உதாரணம் தான் 'ஏஸ்' திரைப்படம். இப்படம் கடந்த மே 23ந் தேதி அன்று வெளியானது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரும் தோல்வியடைந்தது.

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்கிற திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆறுமுககுமார் எழுதி, இயக்கி, தயாரித்த 'ஏஸ்' ஒரு காதல், குற்றம், மற்றும் நகைச்சுவை கலந்த படமாகும். இப்படம் வெளியான நாளில் ரசிகர்களிடமிருந்து கலவையான மற்றும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. பெரும்பாலான விமர்சகர்களும் படத்தை நிராகரித்தனர். இந்த எதிர்மறை விமர்சனங்களால் படத்தின் வசூல் பெரிதும் பாதிக்கப்பட்டன. படம் பெரியளவில் புரமோஷன் செய்யப்படாததும் இதன் வசூல் சரிவுக்கு ஒரு காரணமாக கூறப்பட்டது.

ஏஸ் திரைப்படத்தின் வசூல்

₹20 கோடிக்கும் மேல் செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் திரையரங்குகளில் இருந்து ₹9.40 கோடி மட்டுமே வசூலித்தது. ருக்மிணி வசந்த் நாயகியாக நடித்த இந்த படத்தில் யோகி பாபு, பி.எஸ். அவினாஷ், பப்லு பிரிதிவிராஜ், திவ்யா பிள்ளை, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'ஏஸ்' படத்திற்கு கரண் பி. ராவத் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பு செய்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் பாடல்களை எழுதியுள்ளார். சாம் சி.எஸ். பின்னணி இசையமைத்துள்ளார்.

ஏஸ் ஓடிடி ரிலீஸ்

திரையரங்கில் அட்டர் பிளாப் ஆன ஏஸ் திரைப்படம் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், தற்போது OTTயில் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது. ஏஸ் திரைப்படம் ரிலீஸ் ஆகி மூன்று வாரங்கள் மட்டுமே ஆகும் நிலையில், எந்தவித அறிவிப்பும் இல்லாமல் ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது விஜய் சேதுபதியின் 51வது திரைப்படம் ஆகும்.