தமிழ் சினிமாவில் நுழைய, படாத பாடு பட்டு, விடா முயற்சிக்கு பின், ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக அறிமுகமாகி, பின் குணச்சித்திர நடிகர், வில்லன் என படிப்படியாக தன்னுடைய நடிப்பு திறமையை நிரூபித்து,  ஹீரோவாக தன்னை மெருகேற்றிக்கொண்டவர்  நடிகர் விஜய் சேதுபதி.

இவர் முதலில் ஹீரோவாக அறிமுகமான 'தென்மேற்கு பருவக்காற்று'  திரைப்படம் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தது. பின் 'பீசா' ,  'நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம்' ஆகிய படங்கள் இவரை நிலையான ஹீரோவாக்கியது. 

இந்நிலையில் தற்போது, தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் சேதுபதி,  ஹீரோவாக மட்டுமே நடிக்காமல்,  தன் மனதிற்குப் பிடித்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

ரசிகர்கள் மனதில் ஹீரோவாக இடம்பிடித்த நடிகர்கள் ஏற்க மறுக்கும்  வில்லன் கேரக்டரை கூட சர்வ சாதாரணமாக ஒப்புக்கொண்டு இவர் நடித்து வருவதை பார்த்து பலர் இவரை புகழ்ந்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் ஒரு படத்திற்கு, குறைந்த பட்சம் 8 கோடிக்கும் மேல்  சம்பளம் வாங்கும் இவர்,  முதல் முதலாக தான் வாங்கிய சம்பளம் குறித்து,  இவர் தொகுத்து வழங்கி வரும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.  இவர் படித்து முடித்து வேலைக்குப் போய் முதல்முதலாக 3 ஆயிரத்து 500 ரூபாய்தான் சம்பளமாக வாங்கினாராம். மேலும் விட முயற்சி, நம்பிக்கை இருந்தால் எல்லாம் சாத்தியம் எனவும் கூறியுள்ளார்.