கொத்தடிமைகளை மீட்கப்போராடும் ஒரு பெண்ணுக்கு ரூ.5 லட்சம் நிதி வழங்கி சமூக சேவையில் தனக்கு இருக்கும் அக்கறையை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார் நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் சேதுபதி. அவரது இந்த சேவை மனப்பான்மையை மக்கள் மனதார வாழ்த்தி வருகிறார்கள்.

தனியார் தொலைக்காட்சி நடித்திவரும் ஒரு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி அதன் தொகுப்பாளராக பங்கேற்று நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கடந்த மாதம் பச்சையம்மாள் என்ற இளம்பெண் கலந்து கொண்டார். செங்கல் சூளையிலும் முறுக்கு கம்பெனிகளிலும் 10 வருடங்களாக கொத்தடிமையாக இருந்து வெளி உலகமே தெரியாமல் வளர்ந்த பச்சையம்மாள் அங்கு நடைபெறும் கொடுமைகளை அதிகாரிகளுக்கு ரகசியமாக எடுத்துச் சொல்லி கொத்தடிமைகளாக இருந்தவர்களை மீட்டெடுத்தவர் ஆவார்.

அப்படி கொடுமைப்படுத்திய முதலாளிக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை வாங்கி கொடுத்தவர் அவர் .அத்தோடு நில்லாமல்  தன்னைப் போல் கொத்தடிமைகளாக எங்கெங்கு மக்கள் சிக்கித்தவிக்கிறார்களோ அவர்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு தருவதை தனது லட்சியமாகக் கொண்டு, செயல்பட்டு வருகிறார்.

அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பச்சையம்மாளிடம் விஜய்சேதுபதி ‘உங்களுக்கு என்னென்ன வேண்டும்?’ என்று கேட்டார். அதற்கு ‘ஒரு ஆபிஸ் போட வேண்டும். அதில் 3 கம்ப்யூட்டர்கள் வேண்டும். ஒரு கார் வாங்கவேண்டும்,” என்றார். கார் எதற்காக? என்று விஜய்சேதுபதி கேட்க, ‘என்னை மாதிரி, பாதித்தவர்களை மீட்பதற்காக நாங்கள் இப்போது வாடகைக் காரைத்தான் எடுத்துக்கிட்டு செல்வோம். அதிகமாக செலவாகிறது. காரணம் சொன்னால் டாக்சிக்காரங்க வர பயப்படுறாங்க. அதனால் சொந்தமாக ஒரு கார் இருந்தால் உடனே, பெட்ரோலை போட்டுட்டு நாமே போய் சீக்கிரம் மீட்டுவிட்டு வந்துவிடலாம்’ என்றார்.

இதை கேட்டு நெகிழ்ந்து போன விஜய்சேதுபதி, “பரவாயில்லை, அந்தக் காரை நானே வாங்கித் தருகிறேன். கம்ப்யூட்டர் மற்றும் ஆபிஸ் போடுறதுக்கும், நானே பணம் தாறேன், நீங்க தைரியமா பண்ணுங்க” என்றார். சொன்னதோடு நில்லாமல் விஜய் சேதுபதி அந்த மேடையிலேயே, 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அந்த பெண்ணிடம் கொடுத்தார். அதைக்கண்டு, அந்த பெண் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அடுத்து தனது வாக்குறுதிப்படி கொத்தடிமைகளை மீட்பதற்காக ஒரு சொகுசு காரை வாங்கி அதனை கொத்தடிமை தொழிலாளர் மறுவாழ்வு சங்கத்திடம் வழங்கினார். 

இந்நிகழ்ச்சியின் மூலம் தனக்கு வழங்கப்பட்ட ’மக்கள் செல்வன்’ என்ற பட்டத்துக்கு மிகப்பொருத்தமானவராக விஜய் சேதுபதி திகழ்ந்து வருகிறார் என்று பலரும் அவரைப் பாராட்டிவருகிறார்கள்.