அஜீத்,விஜய்யின் அடுத்த பட இயக்குநர் யார் என்பது இன்றைக்கு மிக முக்கியமான டாபிக்குகளில் ஒன்றாகிப்போனது. காரணம் அவர்களை வைத்து இயக்கும் இயக்குநர்களது சம்பளம் 25, 30 கோடிகளாக மாறிப்போனதுதான். தற்போது விஜய்யின் தளபதி 64’படம் இரண்டாவது ஷெட்யூலை நெர்ங்கியுள்ள நிலையில் ‘தளபதி 65’படத்தை இயக்கப்போகும் அதிர்ஷ்டசாலி யார் என்பது குறித்து சில யூகங்கள் நடமாடத்தொடங்கியுள்ளன.

தீபாவளிக்கு ரிலீஸான விஜய்யின் பிகில் விமர்சன ரீதியாக கைதியை விட சற்று பின் தங்கியிருந்தாலும் வசூலில் பெரும் சாதனைகள் புரிந்துகொண்டே வருகிறது. முதல் 5 நாள் வசூல் 200 கோடியைத் தாண்டிவிட்டது என்று ரீல் சுற்றப்பட்டாலும் வசூல் 100 கோடியைத் தாண்டியிருப்பது மறுக்க முடியாத உண்மை என்றே விநியோகஸ்தர் மற்றும் தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலவரத்தால் தயாரிப்பாளர் பெரிய ஆபத்து இன்றித் தப்புவார் என்றே சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தளபதி 65’படத்தை இயக்கப்போகிறவர் என்று சில பெயர்கள் யூகங்களாக நடமாடத் தொடங்கியுள்ளன. அதில் ‘64 படத்தை இயக்கிவரும் லோகேஷ் கனகராஜின் பெயர் முதல் இடத்திலும் இயக்குநர் ஷங்கரின் பெயர் இரண்டாம் இடத்திலும், ஏற்கனவே விஜயை வைத்து ‘கத்தி’,’சர்கார்’படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் பெயர் மூன்றாவது இடத்திலும் உள்ளது. ஆனால் விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள் ஏ.ஆர்.முருகதாஸ் இறுதி செய்யப்பட்டு விட்டார். சமீபத்தில் லைகா நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்ட லண்டன் கருணாகரன் இப்படத்தைத் தயாரிக்க்ப்போகிறார் என்கிறார்கள்.