தீபாவளிக்கு வெளியாக இருக்கும் ‘தளபதி 63’ படத்துக்கு அடுத்த படமான ’தளபதி 64’ படத்தை 'வேலாயுதம்' பட இயக்குநர் மோகன் ராஜா இயக்கவுள்ளதாக தகவல்கள் நடமாடிவரும் நிலையில் அச்செய்தியை இயக்குநரே உறுதிப்படுத்தியுள்ளார்.

2011ம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஜெனிலியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'வேலாயுதம்'. ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் வசூல் ரீதியில் நல்ல வரவேற்புப் பெற்றது. 45 கோடி பட்ஜெட்டில் தயாரான அப்படம் 85 கோடிவரை வசூலித்ததாகச் சொல்லப்பட்டது.

தற்போது மீண்டும் விஜய் நடிக்கும் படத்தை இயக்க மோகன் ராஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட போது மோகன் ராஜா "'வேலாயுதம்' படம் விஜய் சாருடன் பண்ணினேன். மறுபடியும் படம் பண்ணுவதற்கு பேச்சுவார்த்தை நடந்துட்டு இருக்கு.நல்ல செய்தியை விரைவில் அறிவிக்கிறேன் " என்று தெரிவித்துள்ளார்.

'வேலைக்காரன்' படத்தைத் தொடர்ந்து 'தனி ஒருவன் 2' படம் பண்ணுவதற்கு ஆயுத்தமாகி வந்தார் மோகன் ராஜா. இது ஜெயம் ரவியின் 25-வது படமாக உருவாகவுள்ளது. தற்போது விஜய்யிடம் பேசிவருவதாக மோகன் ராஜா தெரிவித்துள்ளார். இதனால், விஜய் படத்தை இயக்கி முடித்துவிட்டு, ஜெயம் ரவி படத்தை இயக்குவார் எனத் தெரிகிறது. இனிவரும் நாட்களில் நடைபெறும் பேச்சுவார்த்தையை வைத்து எது முதலில் என்பது முடிவாகும்.

தம்பி ஜெயம் ரவியின் கால்ஷீட்டைக் கவனிப்பவரே மோகன் ராஜாதான் என்பதால் விஜய் படம் உறுதியாகும் பட்சத்தில் அதை முடித்துவிட்டே ‘தனி ஒருவன் 2’வில் கவனம் செலுத்துவார் என்று உறுதியாக நம்பலாம்.