குற்றம் கண்டு பிடித்தே பேர் வாங்கிய புலவரான ப்ளூ சட்டை மாறன் ஒரு படத்தைத் தயாரித்து இயக்கப்போகிறார் என்பதுதான் கோடம்பாக்கத்தின் இந்த வார பரபரப்புச் செய்தி எனும் நிலையில் அப்படத்தில் உதவி இயக்குநராக ஓ.சியில் பணிபுரியத் துடிக்கிறார் பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன்.

படங்களின் கதை விவாதம் நடக்கும்போதே ‘இந்த சீன் வேண்டாம் சார். ப்ளூ சட்டை மாறம் கிழிச்சுத் தொங்க விட்டுருவான்’ என்று  இயக்குநர்கள் அஞ்சி நடுங்குகிற அளவுக்கு தனது யுடுப் வலைதளத்தில் படங்களை வெளுத்து அலசிக் காயப் போடுபவர் ப்ளூ சட்டை மாறன். அப்படிப்பட்ட அவரது விமர்சனப் பதிவுகளுக்குக் கீழே மிக ரெகுலராக ‘யோவ் நீ ஒரு படம் இயக்கிப்பாருய்யா’ என்கிற கமெண்டுகள் இல்லாமல் இருக்காது.

இந்நிலையில் அந்த சவால்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ப்ளூ சட்டை மாறன் என்கிற இளமாறன் உண்மையிலேயே ஒரு படம் இயக்கித்துவங்கிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், அவரால் ‘பத்து எண்றதுக்குள்ள’ என்கிற பாடாவதிப் படத்தை எடுத்து பாதிப்படைந்த பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் ...@tamiltalkies மாறன்sir படம் இயக்கவிருப்பது மிக்க மகிழ்ச்சி. அதில் ஒளிப்பதிவாளராகவோ,உதவி இயக்குனராகவோ அவரின் தரத்துக்கும் கருத்துக்கும் நான் ஒகே என அவர் நினைத்தால் work பண்ண தயாராக இருக்கிறேன்.கற்றுக்கொள்ளலாம் எனத்தோன்றுவதால் wil work even without any professional fees🙏🏻 என்று பதிவிட்டுள்ளார்.

‘பத்து எண்றதுக்குள்ள’ படம் ரிலீஸான சமயத்தில் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தைப் பொறுத்துக்கொள்ள மாட்டாமல் பெரும் அக்கப்போர் புரிந்த விஜய் மில்டன் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யக்கூட புறப்பட்டுக்கொண்டிருந்தார் என்பது ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்.