நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்  தொடங்கிய அரசியல் கட்சியின் தலைவர் பத்மநாபன் என்கிற  ஆர்.கே.ராஜா மீது திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ரியஸ் எஸ்டேட் தொழில் செய்யும் ராஜா, 2014ம் ஆண்டு விற்ற  நிலத்திற்கு  பத்திரப்பதிவு செய்து தரவில்லை என்றும் மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள ஆர்.கே.ராஜாவின் மனைவி, மைத்துனர், மாமனாரை அழைத்து வந்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். பிற்பகலில் ஆர்.கே.ராஜாவின் மனைவி சுஜாதாவை மட்டும் விடுவித்தனர்.

இந்நிலையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ராஜாவின் மனைவி வெளியிட்டுள்ள வீடியோவில், என் கணவர் மீதோ, தம்பி, அப்பா மீதும் எந்த வழக்கும் இல்லை. நேற்று இரவு என் தம்பி சுபாஷை போலீசார் அடித்து இழுத்துச் சென்றனர். இன்று காலை 5 மணியளவில் என்னையும் என் தந்தையையும் போலீசார் அழைத்துச் சென்றனர். என் கணவர் எங்கு இருக்கிறார் என்று விசாரணை நடத்தினர்.என்னை மட்டும் விடுவித்துள்ளனர்.

ஆனால், என் தம்பியையும் தந்தையையும் எங்கு வைத்திருக்கிறார்கள். எதற்காக கைது செய்துள்ளனர் என்றும் சொல்லவில்லை. நீதிமன்றங்கள் விடுமுறையில் உள்ள நிலையில், திட்டமிட்டே இப்படி செய்கிறார்கள். சாத்தான்குளம் சம்பவத்தில்  தந்தை, மகனுக்கு நடந்தது போல் இவர்களுக்கும் நடந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. தயவு செய்து காப்பாற்றுங்கள் என்று ஆர்.கே.ராஜாவின் மனைவி சுஜாதா தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.நடிகர் விஜய்க்கும் அவருடைய அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே அரசியல் கட்சி தொடர்பாக பனிப்போர் நீடித்து வரும் சமயத்தில், எஸ்.ஏ.சி.யின் ஆதரவாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பதற்றத்தை உருவாக்கியுள்ளது.