தமிழ் திரையுலகை பொறுத்த வரை அதிகமான ரசிகர்கள் மனத்தில் இடம்பிடித்து மாஸ் ஹீரோவாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். எனினும் சில சமயங்களில் எந்த ஹீரோவை பற்றி அதிகம் பேசப்படுகிறதோ, சமூக வலைத்தளங்களில் அதிகம் தேடப்படுகிறதோ அவரே முதல் இடத்தை பிடிப்பர்.

அந்த வகையில் சமீப காலமாக அதிகம் பேசப்பட்டவரும் தேடப்பட்டவருமாக உள்ளார் தளபதி விஜய். இவர் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' திரைப்படம் இதுவரை வெளியாகவில்லை என்றாலும், இந்த படத்தை பற்றி ரசிகர்கள் அதிகம் பேசி வருவதே இவரை முதல் இடத்தில் தக்க வைத்துள்ளதாக சமீபத்தில் தனியார் நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இரண்டாவது இடத்தில் அஜித் உள்ளார். தலயின் 'வலிமை' படம் குறித்து எந்த அப்டேட் வரவில்லை என்றாலும், விஜய் ரசிகர்களுக்கு போட்டியாக அஜித் பற்றிய தகவல்களை அதிகம் அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருவதால் அஜித்துக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது.

மூன்றாவது இடத்தை கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிடித்துள்ளார். அவ்வப்போது இவர் நடித்து வரும் 'அண்ணாத்த' படம் பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருவதும் குறிப்பிடத்தக்கது. 

இவரை தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் நடிகர் சூர்யா,  விஜய் சேதுபதி, தனுஷ், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், விக்ரம் மற்றும் கார்த்தி ஆகியோர் உள்ளதாகவும் கூறப்படுகிறது.